இந்தியா

அ.தி.மு.க.வின் புதிய சட்டவிதிகளை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது. இதன்படி அக்கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் இருந்தவர் ஜெயலலிதா ஜெயராம். ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு உள்கட்சி பூசல் காரணமாக அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர். சமரசம் ஏற்பட்ட நிலையில் 2 அணிகளும் ஒன்றாக இணைந்தன.

இதையடுத்து முடக்கி வைக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னமும், கட்சி பெயரும் அந்த அணிக்கே திரும்ப கிடைத்தது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆந் தேதி கூட்டப்பட்டது. அதில் அ.தி.மு.க.வில் சட்டவிதிகள் திருத்தம் செய்யப்பட்டன. புதிய சட்டவிதிகளின்படி கட்சியில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன.

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர்.

கட்சி நிர்வாகிகளை நியமித்தல், முக்கிய அரசியல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது, அவசர நேரத்தில் கட்சியின் சார்பில் கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்தவர்களாக அவர்கள் 2 பேருமே விளங்குகின்றனர்.

இதற்கிடையே அ.தி.மு.க. வின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளும், புதிய சட்ட விதிகளும் தேர்தல் கமிஷனின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதை தேர்தல் ஆணையக அதிகாரிகள் பரிசீலனை செய்து வந்தனர். புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடுத்த முடிவுகளுக்கும், புதிய விதிகளுக்கும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

தேர்தல் கமிஷன் நடவடிக்கை மூலம் அ.தி.மு.க.வில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு அ.தி.மு.க. என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.