இந்தியா

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்க கோரும் தமிழக அரசின் கோரிக்கை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். 

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் 24 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து 7 பேரின் உடல்நிலை, மனநிலை, குடும்பச்சூழல் உள்ளிட்ட விவரங்களை உச்சநீமன்ற அறிவுறுத்தலின்படி தமிழக அரசிடம் உள்துறை அமைச்சகம் கேட்டிருந்தது. இதனால் அவர்கள் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று இந்த முடிவை தாம் எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசின் பார்வையோடு மாநில அரசின் பார்வை ஒத்தப்போகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜீவ் குற்றவாளிகளை எந்த சூழலிலும் வெளியே நடமாட அனுமதிக்க முடியாது என்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.