இந்தியா

“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேரும் 27 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். எனவே அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.” என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “சிறையில் உள்ள 7 பேரையும் மத்திய அரசு விடுவிக்க மறுத்தது ஏமாற்றம் அளிக்கிறது. 2014ஆம் ஆண்டிலேயே 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு கருத்து கேட்டது. மத்திய அரசு 4 ஆண்டுகளாக அமைதியாக இருந்துவிட்டு தற்போது நிராகரித்துள்ளது. 3 மாதங்களுக்குள் மத்திய அரசு பதில் அளிக்க கடந்த ஜனவரியில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

வழக்கம்போல் மத்திய அரசு தாமதம் செய்துவிட்டு நேற்று ஜனாதிபதி மூலம் நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல் அதன் பொறுப்பை தட்டிக்கழிப்பதுபோல் உள்ளது. பொறுப்பை தட்டிக்கழிப்பதில் மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போடுகின்றன. மாநில அரசின் கோரிக்கையை ஜனாதிபதி மூலம் நிராகரித்திருப்பது உள்நோக்கம் கொண்டது.” என்றுள்ளார்.