இந்தியா
Typography

ஜம்மு - காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, அங்கு உடனடியாக ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. 

பா.ஜ.க.வுடன் கூட்டணி முறிவு ஏற்பட்டதால் ஜம்மு- காஷ்மீரில் முதல்வராக இருந்த மெகபூபா முப்தி நேற்று இராஜினாமா செய்தார். இதனையடுத்து, இன்று காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அங்கு, என்.என்.வோரா ஆளுநராக உள்ளார்.

87 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 2014ஆம் ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் போது ஏற்கனவே ஆட்சி செய்த காங்கிரஸ் - தேசியமாநாட்டு காங்கிரஸ் கூட்டணி பிரிந்தது, தனித்தனியாக போட்டியிட்டது. தேர்தல் முடிவில் தொங்கு சட்டசபை அமைந்தது. 28 தொகுதிகளை பிடித்து மக்கள் ஜனநாயக கட்சி முதலிடம் பிடித்தது. ஆட்சியமைக்க போதிய பலமான 44 உறுப்பினர்கள் எந்த கட்சியிடமும் கிடையாது. மோடி அலை மற்றும் ஆளும்கட்சிக்கு எதிரான எதிர்ப்பு காரணமாக ஜம்மு பிராந்தியத்தில் பா.ஜனதா அமோக வெற்றியை தனதாக்கியது.

ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதம், உள்ளூர் பயங்கரவாதம், இளைஞர்கள் பயங்கரவாத இயக்கத்தில் சேர்தல், பிரிவினைவாதிகள் தூண்டிவிடுதல், பாதுகாப்பு படைகளுக்கு எதிரான கல் வீச்சு சம்பவம் மற்றும் பிற வன்முறை சம்பவங்களால் நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்தது. இதனால் பாதுகாப்பு படைகள் காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை தொடர்ந்தது. இந்நிலையில் ரமலான் போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் ரமலான் மாதத்தையொட்டி பாதுகாப்பு படைகள் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இருப்பினும் பொதுமக்களை இலக்காக வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டது. ஆனால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் பயங்கரவாதிகள் தரப்பில் துப்பாக்கி சூடு மற்றும் கையெறி குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

இவ்விவகாரத்தில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பா.ஜனதா இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டின் நன்மையை மனதில் கொண்டு, மாநிலத்தில் இப்போது எழுந்து உள்ள நிலையை கட்டுக்குள்கொண்டுவர ஆட்சியை ஆளுநர் கையில் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளோம் என மத்திய அரசு அறிவித்தது. இதன் முலம் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.

பா.ஜனதா ஆதரவை வாபஸ் பெற்றதுமே மெகபூபா முப்தி முதல்வர் பதவியை இராஜினாமா செய்வதாக நேற்று கடிதம் கொடுத்தார். இதனையடுத்து மாநிலத்தில் இன்று ஆளுநர் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்