இந்தியா
Typography

சென்னை - சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரியில் விவசாயிகள் இன்று தீக்குளிக்க முயன்றனர்.

சுமார் ரூ 10,000 கோடி செலவில் சேலம் - சென்னைக்கு 8 வழி விரைவு சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் சுமார் 7,000 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தவும் மத்திய மாநில அரசுக்கள் திட்டமிட்டன.

கடந்த 18ம் திகதி தொடக்கம், இச்சாலை அமைப்பதற்கான நில அளவீடு பணிகள் தொடங்கிய நிலையில், விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையிலேயே தங்களது நிலங்களுக்கு ஊடாக நில அளவீடு செல்வதை அறிந்த பல விவசாயிகள் இன்று தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. அதை முன் கூட்டியே தடுத்து நிறுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக, முன்னெச்சரிக்கையாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. திருவண்ணாமலையில் நடந்த விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி விஜூ கிருஷ்ணன் கலந்து கொண்டார். இவர் கடந்த மார்ச் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற பேரணியை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர்.

எனவே, இவரது நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியில் உளவுத்துறை போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா போல தமிழகத்திலும் விவசாயிகளை ஒன்றிணைத்து விடக் கூடாது என்பதை தடுக்க அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் 5 மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்கு சுமார் 15% வீத விவசாய நிலங்கள் பயன்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பேசுபொருளாகிவிட்ட சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தின் தேவை என்ன, அதற்கான ஒப்புதல்கள் பெறப்பட்டுவிட்டனவா, பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றதா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அரசுத் தரப்பிடம் இருந்து இதுவரை பதில்கள் இல்லாமல் இருந்தது.

சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கம் பற்றிய ஆய்வு நடைபெற்றுவருகிறது. ஆரம்பத் தகவல்களின் படி, சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசுபாடு அதாவது கரிமத் தடயத்தை (carbon footprint)பெருமளவு குறைக்கும். சென்னை-சேலம் இடையிலான பயணதூரத்தை குறைப்பதால், எரிபொருள் பயன்பாடு குறையும்; இதனால், கரிமத் தடயம் குறையும் மற்றும் போக்குவரத்து மேம்படும் என்பது அரச தரப்பின் வாதமாக இருக்கிறது.

#ChennaiSalemGreenExpressWay #FarmersProtest

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்