இந்தியா
Typography

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி, தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஜூன் 14ஆம் தேதி விசாரித்து மாறுப்பட்ட தீர்ப்பை அளித்தது. அதில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, “18 சட்ட மன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு சரிதான்” என்று தீர்ப்பளித்தார். மற்றொரு நீதிபதியான சுந்தர், “18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் உத்தரவு செல்லாது” என்று தெரிவித்து இருந்தார். இரண்டு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணாவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

விசாரணையை தொடங்கியுள்ள அவர், வருகிற 23ஆம் தேதியில் இருந்து 5 நாட்கள் தினமும் வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். இதனால், சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கில் அடுத்தக்கட்டமாக என்ன திருப்பம் வரப் போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் நீதிபதி சுந்தர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு மர்ம கடிதம் ஒன்று வந்தது. யார் அனுப்பியது என்ற விவரம் எதுவும் அதில் இடம் பெறவில்லை. அந்த கடிதத்தில் “18 சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளித்த உன்னையும், உன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவோம்” என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

அதை படித்துப் பார்த்து நீதிபதி சுந்தர் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் அவர் தெரிவித்தார். இதையடுத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் கடிதம் பற்றி குறிப்பிட்டார். மேலும் மிரட்டல் கடிதம் அனுப்பிய நபரை கண்டுப்பிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இதுபற்றி உடனடியாக விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பட்டினப்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும், மர்ம கடிதம் அனுப்பிய மர்ம நபர்களை பிடிக்க கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மிரட்டல் பின்னணியில் அரசியல் தொடர்புடைய நபர்கள் யாராவது இருக்கலாமா என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மிரட்டலை அடுத்து கடிதம் வந்த நீதிபதி சுந்தர் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் செல்லும் இடங்களிலும் பாதுகாப்பு பணிக்கு போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் நீதிபதிகள் குடியிருப்பை சுற்றி போலீசார் ரோந்து பணியையும் தீவிரப்படுத்தியுள்ளனர். 18 சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரத்தில் சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS