இந்தியா
Typography

‘இலங்கை அரசுக்கும், மக்களுக்கும் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன். அதனையிட்டு பெரு மகிழ்வு கொள்கிறேன்’ என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இலங்கை இந்தியாவின் அயல்நாடு மட்டுமல்ல தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா, இலங்கைக்கு நம்பிக்கையான பங்காளியும் கூட என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘சுவசொரிய’ அம்புலன்ஸ் சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை யாழ். மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் இணையவழி நேரலையில் உரையாற்றுகையிலேயே பிரதமர் நரேந்திரமோடி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், “இலங்கை மக்களுக்கும், அரசுக்கும் வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றுவதற்கு எனக்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்திற்காக நான் மகிழ்ச்சியடைக்கிறேன். இலங்கை முழுவதும் இந்த அம்புலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்படும்.

இதனை யாழ். மாவட்டத்தில் தொடங்கியமைக்கான காரணம் யாழ். மாவட்ட மக்கள் குறிப்பாக வடக்கு மாகாண மக்கள் நீண்டகாலம் துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்தவர்கள். அவர்கள் அந்த துன்பங்களை மறந்து அடுத்தகட்டத்தை நோக்கி நகரவேண்டும் என்பதற்காகவே இதனை செய்தோம்.

நான் இலங்கைக்கு 2 தடவைகள் வந்துள்ளேன். இலங்கையில் குறிப்பாக யாழ். மாவட்டத்திற்கு வருகை தந்த முதலாவது இந்திய பிரதமர் நான் என்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தியா எல்லா சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு உதவுவதற்கு முன் நிற்கும் நாடாகும். இந்தியா இலங்கையின் அயல்நாடு மட்டுமல்ல. தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கைக்கு நம்பிக்கையான பங்காளியாகவும் இந்தியா இருக்கிறது.

இலங்கையின் இன்ப துன்பங்களில் முதலாவதாக பங்கு கொள்ளும் நாடாகவும் இந்தியா இருந்திருக்கிறது. இனியும் இருக்கும். 1927ஆம் ஆண்டு காந்தி அடிகள் இலங்கைக்கு வந்து அங்கு பல இடங்களுக்கும் சென்றிருந்தார்.

அவர் அப்போது கூறியதை நான் இப்போது நினைவு படுத்துகிறேன். இலங்கை மக்கள் இந்தியாவுக்கு வாருங்கள் என நான் அழைக்கிறேன்.

புதிய இந்தியாவை பார்ப்பதற்காக, அதேபோல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். அவருடைய வருகை எமக்கிடையில் இருக்கும் நட்பை மேலும் வலுப்படுத்தும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS