இந்தியா
Typography

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி நலமாக இருக்கிறார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

மு.கருணாநிதியின் உடல்நலம் தொடர்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று நேற்று வியாழக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனர். அதன் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே ஓ.பன்னீர்செல்வம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். அவருக்கு மருத்துவர் குழு தேவையான சிகிச்சை அளித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுக்குழாய் மாற்றப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பினார். தொடர்ந்து அவர் கோபாலபுரம் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்று முன்தினம் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் நேற்று இரவு 09.40 மணிக்கு கோபாலபுரம் வீட்டுக்கு வந்தனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியைப் பார்த்து நலம் விசாரித்தனர். தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் மருத்துவர்களிடம், சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். அப்போது முரசொலி செல்வம், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் மற்றும் முன்னணி தலைவர்கள் உடன் இருந்தனர். பின்னர் 10.07 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வெளியில் வந்தனர்.

அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: “உடல்நலம் குன்றியிருந்ததால் கருணாநிதியை பார்க்க வந்தோம். அவர் நலமுடன் உள்ளார். ஜெயலலிதா அப்போலோவில் இருந்தபோது, தி.மு.க. சார்பாக வந்து பார்த்தனர். அந்த அரசியல் மரபின் அடிப்படையில் நாங்களும் பார்க்க வந்தோம். எங்களை அவர் அடையாளம் கண்டுகொண்டார்.” என்றார்.

இதை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், நடிகர் கமல் ஆகியோர் வந்தனர். அவர்களும் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி கேள்விப்பட்டவுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நேற்று கோபாலபுரம் இல்லத்தின் முன் திரண்டனர். இதையடுத்து ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, கருணாநிதி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி உடல் நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக காய்ச்சல் வந்துள்ளது. அதற்கு தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கவனித்துக் கொள்கிறது. வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு இருக்கிறது. கருணாநிதி உடல்நிலையை கவனத்தில் கொண்டு அவரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்