இந்தியா
Typography

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் உடல்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென்று பின்னடைவு ஏற்பட்டதாகவும், பின்னர் சீரடைந்ததாகவும் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று மு.கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27ஆந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது.

இதைத்தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்ததை தொடர்ந்து அவரது ரத்த அழுத்தம் சீராகி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.

அரசியல் கட்சி தலைவர் கள், திரையுலக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரித்து செல்கிறார்கள். கருணாநிதியின் உடல்நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக ஏராளமான தொண்டர்கள் மருத்துவமனைக்கு ன்பு குவிந்து உள்ளனர்.

வழக்கமாக இரவு 08.00 மணி அளவில் கருணாநிதியின் உடல்நிலை குறித்த அறிக்கை வெளியாகும். ஆனால் அந்த நேரத்தில் நேற்று அறிக்கை வெளியாகாததால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவமனைக்கு முன்பு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். சென்னை நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டது. இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், நேற்றிரவு 09.50 மணிக்கு காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், “தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், சிறப்பான மருத்துவ சிகிச்சை மூலம் அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பும் வகையில் முக்கிய அறிகுறிகள் தென்படுகின்றன. அவருடைய உடல்நிலை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ நிபுணர்கள் குழு மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மருத்துவ அறிக்கை வெளியான பிறகு இரவு 10.15 மணி அளவில் மத்திய மந்திரி ஆ.ராசா ஆஸ்பத்திரிக்கு வெளியே கூடி இருந்த நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சிறிது நேரம் தற்காலிகமாக பின்னடைவு ஏற்பட்டது. தற்போது டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் காரணமாக அந்த பின்னடைவு சீர்செய்யப்பட்டு கருணாநிதி நல்ல நிலையில் இருக்கிறார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே வதந்திகளை நம்பவேண்டாம். பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான். டாக்டர்களின் தீவிர முயற்சியால் அது சீர்செய்யப்பட்டுவிட்டது” என்றார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்