இந்தியா

உடல் நலக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, இன்னும் சில நாட்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என்று மருத்துவமனை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. 

காவேரி மருத்துவமனை நேற்று மாலை 6.30 மணிக்கு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது,

“தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி கடந்த 27ஆந் தேதியன்று ரத்த அழுத்தக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அந்த நிலையில் இருந்து சீரான நிலைக்கு கொண்டு வரப்பட்டார். டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் குழுவின் மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் 29ஆந் தேதியன்று சுவாசிப்பதில் பிரச்சினை வந்ததால், அவருக்கு மருத்துவ ரீதியாக பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைகளுக்கு அவரது உடல் நல்ல ஒத்துழைப்பு அளித்தது. கருணாநிதியின் முக்கிய உடல்கூறுகள் படிப்படியாக சீரான நிலையை அடைந்துள்ளன.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு இருந்தாலும், வயது முதிர்ச்சியால் ஏற்படும் பொதுவான உடல்நல குறைவு, மாறுபட்டுள்ள கல்லீரலின் இயக்கம், ரத்த ஓட்டம் ஆகியவற்றால், அவரை மேலும் சில நாட்கள் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து அனுமதிப்பது அவசியமாகிறது. நல்ல மருத்துவ உதவியுடன் கருணாநிதி உடல்நிலையின் முக்கிய செயல்பாடுகள் சீராக பராமரிக்கப்பட்டு வருகிறது.” என்றுள்ளது.

இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை நேரில் சென்று நலம் விசாரித்தனர்.