இந்தியா

வயது முதிர்வு காரணமாக ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுமா என்பது 24 மணி நேரத்துக்கு பிறகே தெரியும் என்று கூறப்பட்டுள்ளது.

வயது முதிர்வு காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, கடந்த மாதம் (ஜூலை) 27ஆந் தேதி நள்ளிரவு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.

இதனால் இரவோடு இரவாக அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

ஏற்கனவே துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்து கருணாநிதியை நேரில் பார்த்த புகைப்படங்கள் வெளியான நிலையில், நேற்று முன்தினம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வந்து நேரில் பார்த்த படம் மட்டும் வெளியாகவில்லை.

இதனால், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இருக்குமோ? என்று தொண்டர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இதற்கிடையே, கடந்த 2 நாட்களாக கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.

ஏற்கனவே, அவரது கல்லீரலின் செயல்பாடு குறைந்த நிலையில், மஞ்சள்காமாலை நோயின் அறிகுறியும் தென்பட்டது. ரத்த தட்டணுக்களின் (பிளேட்லெட்ஸ்) எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வந்துள்ளது. இதனால், அவரது உடலில் செலுத்தப்படும் மருந்துகளும் மெதுவாகவே வேலை செய்தது. நாடித்துடிப்பும் படிப்படியாக குறைந்து வந்துள்ளது.

இதனால், கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை உரிய பலன் அளிக்காததால் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது.

இந்த நிலையில், நேற்று மாலை 6.30 மணி அளவில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி ஆஸ்பத்திரியின் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

அவரது வயது மூப்பின் மூலம் வரும் பிரச்சினைகளை கணக்கிடும் போது, முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை பராமரிப்பதில் சவாலான நிலையே தொடர்கிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவ சிகிச்சையை அடுத்த 24 மணி நேரத்தில், அவரது உடல் எவ்வாறு ஏற்கிறது என்பதை வைத்துத்தான் நோயில் இருந்து அவர் மீள்வதை தீர்மானிக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக காவேரி ஆஸ்பத்திரியில் இருந்து மருத்துவ அறிக்கை வெளியான நிலையில், நேற்று இரவு 7 மணி முதல் தி.மு.க. தொண்டர்களின் வருகை அதிகரித்தது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள். அதேபோல், கூட்டணி கட்சி தலைவர்களும் அங்கு வந்தனர்.

தே.மு.தி.க. துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். நேரம் செல்லச் செல்ல நிர்வாகிகளின் வருகையும், தொண்டர்களின் வருகையும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. பல தொண்டர்கள் கதறி அழுதபடி நின்றனர்.

கூட்டம் அதிகமானதை தொடர்ந்து, காவேரி ஆஸ்பத்திரி முன்புறம் உள்ள இருவழிச்சாலை ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அதிக அளவில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து பதற்றமான நிலையே அங்கு இருந்தது.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, கவிஞர் கனிமொழி எம்.பி., மு.க.தமிழரசு, கருணாநிதியின் துணைவி யார் ராஜாத்தியம்மாள், கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் உள்ளிட்டோர் நேற்று காலையில் இருந்தே ஆஸ்பத்திரியில் இருந்தனர்.

கருணாநிதியை பார்ப்பதற்காக மதியம் 1.45 மணி அளவில் அவரது மனைவி தயாளு அம்மாள் ஆஸ்பத்திரிக்கு வந்தார். வழக்கமாக கருணாநிதி பயன்படுத்தும் காரிலேயே அவர் அழைத்து வரப்பட்டார். ஆஸ்பத்திரியின் பின்புற வாயில் வழியாக சக்கர நாற்காலியில் அமரவைத்தபடி தயாளு அம்மாள் உள்ளே அழைத்து செல்லப்பட்டார். சுமார் 20 நிமிடங்கள் அங்கு இருந்த அவர், பின்னர் அதே காரில் கோபாலபுரம் இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்தார். சற்று நேரத்தில் வெளியே வந்த அவர், “தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமடைய அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்” என்று கூறிச் சென்றார்.

ஆனால், முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, “கருணாநிதி நலமாக இருக்கிறார்” என்று கூறினார்.

மத்திய மந்திரி நிதின் கட்காரி நேற்று இரவு ஆஸ்பத்திரிக்கு வந்து, கருணாநிதியின் உடல்நிலை பற்றி மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார். அவருடன் தமிழக பாரதீய ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும் வந்திருந்தார்.