இந்தியா
Typography

மாநிலங்களவையில் இன்று வெள்ளிக்கிழமை திருத்தப்பட்ட முத்தலாக் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. 

முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம்’, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறி விட்டது. மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது.

முஸ்லிம் ஆண்களுக்கு விரோதமான அம்சங்கள் இருப்பதாக கூறி, அந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே, அவர்களின் கோரிக்கையை ஏற்றும், முஸ்லிம் ஆண்களின் அச்சத்தை போக்கும்வகையிலும், அந்த மசோதாவில் 3 திருத்தங்கள் செய்ய மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

‘முத்தலாக்’ விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்ட ஆணுக்கு ஜாமீன் கிடையாது என்று முன்பு இருந்தது. தற்போது, மனைவியின் கருத்தை கேட்ட பிறகு, ஜாமீன் வழங்க மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. மனைவிக்கு இழப்பீடு வழங்க கணவர் சம்மதித்த பிறகு, மாஜிஸ்திரேட்டு ஜாமீன் வழங்கலாம்.

‘முத்தலாக்’ விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ஆண் மீது, பக்கத்து வீட்டுக்காரர் கூட புகார் கொடுக்க முடியும் என்று முன்பு இருந்தது. இனிமேல், பாதிக்கப்பட்ட மனைவியோ, அவருடைய ரத்த சம்பந்த உறவினர்களோ கொடுக்கும் புகார்கள் மீது மட்டுமே வழக்கு பதியப்படும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கணவன்–மனைவி இடையே சமரசம் செய்து வைக்க மாஜிஸ்திரேட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்று மூன்றாவது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில், ‘முத்தலாக்’ முறை சட்ட விரோதமானதாக நீடிக்கும். இந்த திருத்தங்களுடன், முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

மழைக்கால கூட்டத்தொடரின் கடைசிநாள் என்பதால், இந்த மசோதா நிறைவேற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆளும் பா.ஜ.க அரசு வலியுறுத்தியுள்ளது. மாநிலங்களவையில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், திருத்தங்களுடன் கூடிய மசோதாவை மீண்டும் மக்களைவைக்கு அனுப்பப்பட்டு அங்கு நிறைவேற்றப்படும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS