இந்தியா
Typography

சர்ச்சைக்குரிய விசயங்களும், தேவையற்ற விவாதங்களும் நம்மை திசைதிருப்ப அனுமதிக்கக்கூடாது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சுதந்திர தினத்தையொட்டி நேற்று செவ்வாய்க்கிழமை தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அதில் அவர் கூறியதாவது:-

“சுதந்திர தினம் நமக்கு எப்போதும் விசேஷமானதுதான். ஆனால், இந்த ஆண்டு சுதந்திர தினத்துக்கு வழக்கத்துக்கு மாறான முக்கியத்துவம் உள்ளது. அதுதான், மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் தொடக்கம்.

மகாத்மா காந்தி, கண்டம் விட்டு கண்டம் நினைவுகூரப்படும் மனிதராக திகழ்கிறார். அவர் இந்தியாவின் அடையாளம். அவரது சுதேசி கொள்கை இன்றும் பொருத்தமானது. வன்முறையை விட அகிம்சைக்கு பலம் அதிகம் என்று அவர் காண்பித்தார். அவரது கொள்கைகளை நமது அன்றாட பணிகளில் பின்பற்ற வேண்டும்.

நாடு இப்போது முக்கியமான தருணத்தில் இருக்கிறது. நீண்ட காலமாக காத்திருக்கும் இலக்குகளை அடைய வேண்டி உள்ளது. இந்த நேரத்தில், சர்ச்சைக்குரிய விஷயங்களும், தேவையற்ற விவாதங்களும் நம்மை திசைதிருப்ப நாம் அனுமதிக்கக்கூடாது.

பெண்கள், தாம் விரும்பிய வாழ்க்கையை வாழும் உரிமை பெற்றவர்கள். தனது பணிகளை உண்மையுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செய்யும் ஒவ்வொரு இந்தியனும் சுதந்திர போராட்ட மாண்புகளை கட்டிக்காப்பதாகவே அர்த்தம்.

நாடு அடைந்து வரும் வளர்ச்சியும், மாற்றத்தின் வேகமும் பாராட்டுக்குரியது. இந்தியா, அரசாங்கத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல, இந்திய மக்களுக்கு சொந்தமானது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்