இந்தியா
Typography

மத்தியை ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு மாத காலம் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நேற்று சனிக்கிழமை டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் கட்சியின் மாநில தலைவர்கள், மாநில பொறுப்பு வகிக்கும் பொதுச்செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மத்தியில் உள்ள மோடி ஆட்சியில் ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் நடைபெற்ற முறைகேடு மற்றும் பல்வேறு ஊழல்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது என்றும், இதற்காக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு மாத காலம் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மாநில தலைநகரங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெறும்.

ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் பெருமளவில் ஊழல் நடந்து உள்ளது. இதுபற்றி பாராளுமன்ற கூட்டுக்குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறோம். இதில் இருந்து நாங்கள் பின்வாங்கப் போவது இல்லை.

கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏராளமான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு உள்ளது. அங்கு ஏற்பட்ட மழை, வெள்ள சேதத்தை தேசிய பேரழிவாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும். அந்த மாநிலத்துக்கு கூடுதல் நிதி உதவி அளிக்க வேண்டும்.

இதுபோன்ற பிரச்சினைகளை பிரதமர் மோடி அரசியல் நோக்கத்துடன் பார்க்கக்கூடாது. நிதி உதவி வழங்குவதில் பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களுக்கும், பாரதீய ஜனதா அல்லாத கட்சிகளின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கும் இடையே அவர் பாகுபாடு காட்டுவதை மோடி நிறுத்திக் கொள்ளவேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு கேரள, கர்நாடக மக்களுக்கு உதவி செய்யவேண்டும்.

கேரளாவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் நிவாரண நிதி வழங்கி வருகின்றன. காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரண உதவியாக வழங்க வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS