இந்தியா
Typography

“நாம் பேரழிவின் நடுவில் இருக்கிறோம். அதனை சமாளிக்க நாம் ஒன்றுபட வேண்டும்.” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மாநிலத்தில் உள்ள 80 அணைகளும் நிரம்பியது. பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் கேரளாவுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.ஏராளமான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,

“நாம் பேரழிவின் நடுவில் இருக்கிறோம். அதனைச் சமாளிக்க நாம் ஒன்றுபட வேண்டும். மழைவெள்ளம், நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது. இன்று சுமார் 58,506 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்கள் அருகில் உள்ள பாதுகாப்பு மையங்களைத் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு உதவிகள் கிடைக்கும்” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS