இந்தியா
Typography

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நீடிப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். 

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“பொதுநலனில் கொண்டுள்ள அக்கறையினால் பல்வேறு பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து வெளிப்படுத்துவதில் தணியாத ஆர்வமுடன் செயலாற்றிவரும் மூத்த பத்திரிகையாளரும், நக்கீரன் இதழின் ஆசிரியருமான நக்கீரன் கோபாலை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும், அ.தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான ‘தொடர்’ ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியரை, சர்வாதிகார பாசிச மனப்பான்மையுடன் கைது செய்திருப்பது, கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தின் கழுத்தில் ஏறி அமர்ந்து சவாரி செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசும், தமிழக கவர்னரும் எண்ணுவது, தமிழ்நாட்டில் நடப்பது பா.ஜ.க. ஆட்சியே என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அ.தி.மு.க. ஆட்சியின் அனைத்து வகை ஊழல்களுக்கும், சட்டத்திற்கு புறம்பாக முட்டுக்கொடுத்து காப்பாற்றிக்கொண்டிருக்கும் மத்திய அரசும், மாநிலத்தில் உள்ள கவர்னரும் ‘பொம்மை’ அரசை பயன்படுத்தி, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வேலையில் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது.

கவர்னர் கொடுத்த புகாரின் பேரில், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தையே கொச்சைப்படுத்தி பேசிய எச்.ராஜாவை கைது செய்யவில்லை. போலீஸ் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்ற நேரத்தில் கவர்னரே அவரை சந்தித்துப்பேசுகிறார். இன்னொரு பக்கம் ‘பாசிச பா.ஜ.க’ என்றதால் மாணவி சோபியா கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை பற்றி, தொடர் எழுதினால் நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கைது செய்யப்படுகிறார்.

என்னதான் நடக்கிறது தமிழகத்தில்? தமிழ்நாடு என்ன ஜனநாயக மாநிலமா? என்றே கேட்கத் தோன்றுகிறது. அ.தி.மு.க. அரசும், பாசிச பா.ஜ.க. அரசின் முகவராக இருக்கும் கவர்னரும் தமிழ்நாட்டில் ஒரு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை அமல்படுத்தி, பத்திரிகை சுதந்திரத்திற்கு பகிரங்கமான அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்.

பொம்மை அரசை வைத்துக்கொண்டு தங்கள் சித்தாந்தங்களுக்கு வேண்டாதவர்களை கைது செய்யத்தூண்டும் மத்திய அரசும், கவர்னரும் இந்த அரசை கலைத்துவிட்டு நேரடியாகவே பா.ஜ.க. வழிகாட்டுதலில் மாநில அரசை நடத்தலாம். அதை விடுத்து விட்டு, கொல்லைப்புற வழியாக முகமூடி அணிந்துகொண்டு தங்கள் கட்டளைகளை நிறைவேற்ற எடுபிடி அரசைப் பயன்படுத்துவது வெட்கக்கேடானது. பொறுப்பான மாநில கவர்னர் பதவியில் இருப்பவர் மறைமுகமாக அரசியல் செய்ய நினைக்கும் போது, விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் பக்குவத்தை பெறவேண்டும்.

அப்படி பொறுத்துக்கொள்ள இயலாமல், முதல்-அமைச்சரை ராஜ்பவனுக்கே அழைத்து, நக்கீரன் கோபாலை கைது செய்யச் சொல்லியிருப்பது ஒரு மாநில கவர்னருக்கு அதுவும் அரசியல் சட்டப்பதவியை வகிப்பவருக்கு அழகா? ஆகவே, கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். மேலும் அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கினை நிபந்தனையின்றி திரும்பப்பெற வேண்டும்.” என்றுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்