இந்தியா
Typography

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் ஞாயிற்றுக் கிழமை 1353 காளைகள் மற்றும் சுமார் 500 வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் பங்குபற்றின.

எதிர்பாராத விதமாக இந்தப் போட்டியில் மாடு முட்டி 25 வயதாகும் ராமு மற்றும் 43 வயதாகும் சதீஷ்குமார் ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த இவர்கள் இருவரும் பார்வையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர மாடு முட்டியதில் சுமார் 41 பேர் காயமடைந்தனர். 21 காளைகளைப் பிடித்த திருச்சியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் முதலிடமும் 16 காளைகளைப் பிடித்து காட்டூரைச் சேர்ந்த கார்த்தி என்பவர் 2 ஆம் இடமும் பிடித்தனர். இப்போட்டிக்கு நேரில் வருகை தந்த கின்னஸ் உலக சாதனைக்கான அங்கீகார குழுவைச் சேர்ந்த 2 பேர் போட்டியை முழுமையாகப் பார்வையிட்டு சாதனைக்கான சான்றிதழை வழங்கினர்.

விராலிமலை அம்மன் குளம் பட்டமரத்தான் கருப்பசாமி கோயில் திருவிழாவை ஒட்டி நடத்தப் பட்ட நாட்டின் மிகப் பெரிய ஜல்லிக் கட்டான இது உலகிலேயே மிகப் பெரிய ஜல்லிக்கட்டாகவும் அதிகளவு காளைகள் மற்றும் வீரர்கள் பங்குபற்றும் போட்டியாகவும் சாதனை படைத்துள்ளது. சிங்கப்பூர், மலேசியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் இருந்தும் 250 இற்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த ஜல்லிக்கட்டைக் காணக் குழுமியிருந்தனர். கின்னஸ் சாதனையாக அமையப் போவதால் 3 வெளிநாட்டு நடுவர்களும் பங்கேற்றிருந்தனர்.

பாதுகாப்புக்காக ஆயிரத்துக்கும் அதிகமான போலிசார்கள் நியமிக்கப் பட்டனர். 2000 காளைகள் வரை அழைத்து வரப்பட்டு 1353 காளைகள் பங்கேற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டி தான் உலகிலேயே அதிகளவு காளைகள் பங்குபற்றிய ஜல்லிக்கட்டாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS