இந்தியா

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உச்ச நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இது தொடர்பில் தொடர்ந்து 3 நாட்களாகத் தர்ணாவை மேற்கொண்டு வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதனை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

திங்கட்கிழமை மேற்கு வங்க போலிசுக்கு எதிராக சிபிஐ இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருந்தது. சிபிஐ இன் கோரிக்கையில் கொல்கத்தா கமிசனர் இந்த வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் மேற்கு வங்க அரசு சிபிஐ விசாரணையைத் தடை செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோரால் விசாரிக்கப் பட்டு வருகின்றது.

மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு மூலம் தமக்கு வெற்றி கிடைத்துள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று சொல்லவில்லை. ஆனால் போலிஸ் கமிசனரைக் கைது செய்யக் கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதை நாம் வரவேற்கின்றோம். அரசியல் ரீதியாக சிபிஐ பயன்படுத்தப் படுவதையே நாம் எதிர்க்கின்றோம்' என்றுள்ளார்.