இந்தியா

திருச்செந்தூருக்கு அருகே கல்லாமொழி கடற்கரைப் பகுதியில் நிலக்கரி இறங்குதளம் மற்றும் கடலுக்குள் பாலம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீனவர்கள் கடலுக்குள் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தூத்துகுடி மாவட்டத்திலுள்ள குலசேகரன் பட்டினம் அருகே அமைக்கப் பட்டு வரும் அனல் மின் நிலையத்தின் நிலக்கரியை கடல் வழியாகக் கப்பலில் கொண்டு வந்து இறக்க வசதியாகவே இந்த கல்லாமொழி கடற்கரைப் பகுதியில் நிலக்கரி இறங்கு தளமும், பாலமும் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

இப்பணி தொடர்ந்தால் ஆலந்தலைப் பகுதிக்குள் கடல் நீர் புகுந்து வாழ்வாதாரம் பாதிக்கப் படும் என்பதால் தான் இப்போராட்டம் முன்னெடுக்கப் பட்டு வருகின்றது. ஆனால் இதனை அரசு கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. இந்நிலையில் கல்லாமொழி கடற்கரையின் ஆலந்தலைப் பகுதியில் தூண்டில் வளைவும் அமைக்க வலியுறுத்தி ஆலந்தலை மீனவர்கள் வேலை நிறுத்தமும், போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாது கடற்கரையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த படகுகளில் கருப்புக் கொடி கட்டிய வண்னம் சுமார் 500 இற்கும் மேற்பட்ட மீனவர்களும், பொது மக்களும் கடற்கரைப் பகுதியில் திரண்டு போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.