இந்தியா
Typography

சமீபத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவர் மற்றும் நடிகருமான கமல ஹாசன், 'திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே ஊழல் கட்சிகள். ஊழல் பொதியை நாம் சுமக்க முடியாது. மக்கள் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.' என்று தொனிப்பட பேசியிருந்தார்.

இதையடுத்து அவசியமில்லாது திமுகவை கமல் விமரிசித்துள்ளார் என்றும் இது கண்டனத்துக்கு உரியது என்றும் தமிழகக் காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கை விடுத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தான் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசு நீக்கப் பட்டு புதிய காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2 ஆம் திகதி நியமிக்கப் பட்டு 8 ஆம் திகதி பதவியேற்றும் இருந்தார். பதவியேற்ற பின் கே.எஸ்.அழகிரி பேசிய போது திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். கமலுக்கு முன்பு அழைப்பு விடுத்துப் பேசிய அவர் தற்போது கமலைக் கண்டிப்பதாக அறிக்கை வெளியிட்டு பல்டி அடித்து மக்களின் நகைப்புக்கு அழகிரி உள்ளாகியுள்ளார்.

கமலுக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் இடையேயான விரிசல் எல்லை கடந்து போயிருந்தாலும் காங்கிரஸ் மீது கமலுக்கு இன்னும் நன்மதிப்பு இருப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். இந்நிலையில் தான் முன்பு கமலுக்கு அழகிரி அழைப்பு விடுத்திருந்த போது, 'கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்குத் தான் வர வேண்டும். அவர் மதச்சார்பற்ற கொள்கை உடையவர். அவர் தனித்துப் போட்டியிட்டால் மதச்சார்பற்ற வாக்குகள் தான் சிதறும்' என்று பேசியிருந்தாலும் ஒரு நாளுக்குள் தடாலடியாக மாற்றுக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அதாவது அவரின் சமீபத்திய அறிக்கையில், 'திமுக மீதான கமலின் விமரிசனம் பாஜகவுக்கு உதவும் என்றும் பாஜக அபிமானியான அவர் அதன் நிழல் போன்ற எண்ணத்தைப் பிரதிபலிக்கின்றார்.' என்றும் அழகிரி தெரிவித்துள்ளார். இதனால் கமல் குறித்த புரிதலும், திமுக கூட்டணி குறித்த நிலவரமும் அழகிரிக்குத் தெரியவில்லை என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS