இந்தியா

வியாழக்கிழமை காஷ்மீரின் புல்மாவா பகுதியில் இந்திய சி ஆர் பி எஃப் இராணுவ வீரர்கள் பயணித்துக் கொண்டிருந்த வாகனப் பேரணி மீது பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதக் குழுவான ஜெய்ஸ் இ முகமது நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 இற்கும் அதிகமான வீரர்கள் பலியாகினர்.

இத்தாக்குதலுக்கு உலகளாவிய கண்டனம் எழுந்துள்ள நிலையில் இதன் எதிரொலியாக உலக நாடுகளின் மத்தியில் பாகிஸ்தானைத் தனிமைப் படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. மேலும் இத்தாக்குதலை அடுத்து இந்தியாவின் நகர்வுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு விடுமோ என அஞ்சக் கூடிய அளவுக்குச் சென்றுள்ளது. அதாவது இத்தாக்குதலை அடுத்து இந்தியப் பிரதமர் மோடி தலைமையில் கூட்டப் பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய இராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிப்பது என முடிவு செய்யப் பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பானது அண்டை நாடு ஒன்றுக்கு எதிராக பகிரங்கமாக விடப் பட்ட ஒரு போர் அறைகூவலாகவே கருதலாம் என இராணுவத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் விவகாரத்தை எளிதாக விட்டுக் கொடுக்காது பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பதிலடி கொடுக்கும் நிலையில் மோடி தலைமையிலான அரசு உள்ளதாகவும் அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

ஏற்கனவே 2016 இல் காஷ்மீரின் யூரி பகுதியில் 19 இராணுவ வீரர்களைத் தீவிரவாதிகள் கொலை செய்ததை அடுத்து இந்திய இராணுவம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்ற தாக்குதலை நடத்தி எல்லையில் பல தீவிரவாத முகாம்களை முற்றிலும் அழித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியுள்ள பாகிஸ்தானால் ஒரு போரை எதிர்நோக்கும் ஆற்றலும் வலிமையாக இருக்காது என்பதும் நோக்கத்தக்கது.