இந்தியா
Typography

பாகிஸ்தான் ஒன்றும் நரகம் அல்ல அது நல்ல நாடு என்று நடிகை ரம்யா கூறியுள்ளதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா கர்நாடக மாநிலம் மாண்டியாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நான் பாகிஸ்தானுக்கு டூர் சென்றேன்.. அது நரகம் அல்ல ஒரு நல்ல நாடு. மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியது போன்று பாகிஸ்தான் ஒன்றும் நரக நாடு இல்லை. அவருடைய கருத்து தவறு. அந்நாட்டு மக்களும் நம்மை போன்று உள்ளனர் என்றார்.  

ரம்யாவின் கருத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மைசூர் உள்பட பல்வேறு இடங்களில் ரம்யாவை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.இந்நிலையில் இது குறித்து பாஜக நிர்வாகியும், பிரபல கன்னட நடிகருமான ஜக்கேஷ் கூறுகையில்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ரம்யா ஆகியோர் பாகிஸ்தானில் குடியேறட்டும். நம் எதிரி நாட்டை போய் ரம்யா புகழ்வது வேதனையாக உள்ளது என்றார்.  

காங்கிரஸின் தேசபக்தி ரம்யாவின் கருத்து மூலம் தெரிகிறது. அவரின் கருத்து பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பது போன்று உள்ளது என பாஜக முன்னாள் மாநில தலைவர் பிரகலாத் ஜோஷி எம்.பி. தெரிவித்துள்ளார்.ரம்யா தனது கருத்திற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS