இந்தியா
Typography

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட நடிகரும் அரசியலில் அவ்வப்போது ஈடுபட்டு முன்னால் எம்பியாக பதவி வகித்தவருமான ஜே.கே. ரித்தீஷ் என்பவர் மாரடைப்பால் சனிக்கிழமை காலமாகி உள்ளார்.

46 வயதே ஆகும் இவரது மரணச் செய்தி அறிந்து திரையுலகம் அதிர்ச்சியடைந்துள்ளது. தமிழ்த் திரையுலகில் பல விளம்பரங்களை இவர் செய்து வந்த போதும் பலருக்கும் கணக்குப் பார்க்காது கொடை செய்பவர் என்ற பெயரும் இவருக்குள்ளது.

இவர் அரசியலில் ஈடுபட்ட போது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளிலுமே தன்னைப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டவர் ஆவார். 2009 ஆமாண்டு திமுக ஆட்சியின் போது ராமநாதபுரம் எம்பியாகவும் இவர் பதவி வகித்தார். திமுகவில் இருந்து மு.க. அழகிரி நீக்கப் பட்ட பின்னர் அக்கட்சியில் இருந்து விலகிய ரித்தீஷ் பின்பு 2014 இல் அதிமுகவில் இணைந்தார்.

முதன் முறையாக 2016 இலும் இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு வைத்திய சாலையில் சேர்க்கப் பட்டிருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை மதிய உணவுக்குப் பின் இவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே இவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப் பட்ட போதும் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ரித்தீஷ் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதிப் படுத்தியுள்ளனர்.

இச்செய்தி அறிந்து ஜே.கே. ரித்தீஷின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் எனப் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சின்னி ஜெயந்த் இன் இயக்கத்தில் கானல் நீர் படம் மூலம் அறிமுகமான ஜே.கே.ரித்தீஷ், நாயகன், பெண் சிங்கம் போன்ற படங்களிலும் அண்மையில் வெளி வந்த அரசியல் படமான எல்.கே.ஜி இலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்