இந்தியா
Typography

இந்தியாவின் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப் பட்ட பகுதியாக வேலூரில் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப் பட்டதை அடுத்து தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுள்ளது.

மேலும் இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது.

இத்தீர்ப்பை அடுத்து வேலூர் உட்பட 4 இடங்களில் தேர்தலை ஒட்டிய அரச பொது விடுமுறையும் ரத்து செய்யப் பட்டுள்ளது. பணப் பட்டுவாடா புகாரை அடுத்தே வேலூர் மக்களவைத் தொகுதித் தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஆயினும் ஆம்பூர், குடியாத்தம் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. முன்னதாக வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளராக புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் போட்டியிட்டனர்.

எனினும் கடந்த மார்ச் 27 இல் துரை முருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோருக்குச் சொந்தமான பள்ளி மற்றும் கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப் பட்டது. எனவே வேலூரில் வாக்குச் சேகரிப்புக்காக பணப்பட்டுவாடா நிகழ்த்த முயற்சி மேற்கொள்ளப் பட்டமை அம்பலமாகியது. இதை அடுத்து தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று இத்தொகுதியில் நடைபெறவிருந்த தேர்தலை ரத்து செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.

குடியரசுத் தலைவரின் உத்தரவை எதிர்த்து வேலூரில் தேர்தல நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏ.சி. சண்முகம் சார்பில் தொடுக்கப் பட்ட வழக்கில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் வைக்கப் பட்ட போதும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீற முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்