இந்தியா
Typography

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள பானி புயல் செவ்வாய்க் கிழமை அதிதீவிர புயலாக மாறி வடமேற்குத் திசையில் நகரும் எனவும் இது தமிழகம் மற்றும் ஆந்திராவைக் கடக்காது எனவும் இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது சென்னையில் இருந்து 910 கி.மீ தொலைவில் உள்ள பானி புயல் மே 1 ஆம் திகதிக்குப் பின் தனது பாதையை மாற்றி வடகிழக்குத் திசையில் பயணிக்கும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

ஆயினும் இன்னும் 3 நாட்களுக்கு மீனவர்கள் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடற் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும் புயல் தீவிரமடைவதன் காரணமாக கேரளா மற்றும் வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடற்கரைப் பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் செய்தி வெளியாகி உள்ளது.

இதேவேளை சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வருகின்றது. காற்று வாங்கவும் ஆசுவாசப் படுத்திக் கொள்ளவும் சென்னை மெரீனா கடற்கரைக்குச் சென்ற பொது மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது தமிழகத்துக்கு வராது வங்க தேசத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ள பானி புயலின் தாக்கம் காரணமாக மெரீனா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் கூடக் காற்று வீசவில்லை. இதற்குக் காரணமாக வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயல் தரைப் பகுதியில் இருந்து காற்றை ஈர்ப்பதால் கடலில் இருந்து தரையை நோக்கிக் காற்று வீசவில்லை என விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. மேலும் இப்புயல் காரணமாகத் தமிழகத்தில் இன்னும் வெப்பம் அதிகரிக்கவே செய்யும் என்றும் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்