இந்தியா

இந்தியாவின் பூகோள ஆய்வு மற்றும் இராணுவப் பயன்பாட்டு செய்மதியான ரிசார்ட் 2B ரேடார் புதன்கிழமை அதிகாலை பிஎஸ்எல்விசி சி-46 ரக ராக்கெட்டு மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப் பட்டுள்ளது.

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் ராக்கெட்டு ஏவுதளத்தில் இருந்து புதன்கிழமை அதிகாலை 5.27 மணிக்கு ஏவப் பட்ட இந்த ராக்கெட்டு சரியான பாதையில் பயணித்தது.

மேலும் ரிசார்ட் 2B ரேடார் செய்மதியை வெற்றிகரமாக பூமியின் சுற்று வட்டப் பாதையில் அது நிலை நிறுத்தியது. 615 எடை கொண்ட இந்த ரேடார் செயற்கைக் கோளின் ஆய்வு காலம் 5 ஆண்டுகளாகும். எந்த வேளையிலும் எவ்வாறான மேக மூட்டமான சூழல் இருந்தாலும் பூமியைத் துல்லியமாகப் படம் பிடிக்க வல்லது இந்த செயற்கைக் கோள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரிடர் மேலாண்மை, வனப் பாதுகாப்பு மற்றும் இராணுவப் பயன்பாட்டுக்கு இந்த செயற்கைக் கோள் உபயோகப் படவுள்ளது. இந்த செய்மதி ஏவுகை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் 48 ஆவது மிஷனாகும். இராணுவப் பயன்பாடு எனும் போது எல்லையில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இருப்பிடத்தைக் கண்டறிய இந்த செயற்கைக் கோள் உதவும் என்றும் கூறப்படுகின்றது.