இந்தியா

இம்முறை மக்களவை (லோக்சபா) தேர்தலில் நாடளாவிய ரீதியில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கும் போதும் தமிழகத்தில் புதிதாகக் களமிறங்கிய கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் கூட அழுத்தமாகத் தடம் பதித்துள்ளன.

மேலும் பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் 8 வருடங்களுக்குப் பின் தமிழக அரசியலில் மீண்டும் வலிமை பெற்றிருக்கின்றது. மக்கள் நீதி மய்யம் மொத்தமாகத் தேர்தலில் 3.78% வீத வாக்குகளையும், சட்ட சபை இடைத் தேர்தலில் 4.01% வீத வாக்குகளைவயும் பெற்றுள்ளதால் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் குதூகலத்தில் உள்ளனர். இம்முறை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் ம.நீ.ம கட்சி செய்த பிரச்சாரம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இதே கொங்கு மாடலைப் பயன்படுத்த கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். மேலும் இன்னும் இரு வருடங்களில் தனது கட்சியை மிகவும் பெரியளவில் பலப் படுத்த முடியும் எனவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

கொங்கு மண்டலத்தில் ம.நீ.ம கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 5.3% வீதமாகும். இதில் அதிகபட்சமாக பொள்ளாச்சியில் 6% வீத வாக்குகளை இக்கட்சி பெற்றுள்ளது. இன்னும் இரு வருடங்களுக்குள் அடிமட்ட நிர்வாகிகளைப் பலப் படுத்துவதன் மூலமும், தமிழகத்தில் மாற்று சக்திகளாக விளங்கும் சில சக்திகளை தன்னுடைய கட்சியில் கூட்டணியாகச் சேர்ப்பதன் மூலமும் 2021 ஆமாண்டளவில் தமிழக சட்ட சபையில் எதிர்க் கட்சியாக அமர ம.நீ.ம கட்சித் தலைவர் கமல்ஹாசன் எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதாக செய்தி வெளியாகி உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பிக்கப் பட்டு 14 மாதங்களுக்குள் அது சந்தித்த முதல் தேர்தலிலேயே கூட்டணி ஏதுமின்றி கணிசமான வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேவேளை 50% வீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்திய நாம் தமிழர் கட்சியும் இம்முறை தேர்தலில் ம.நீ.ம கட்சிக்கு இணையாக அதிக வாக்குகளைக் குவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி 11 இடங்களில் 3 ஆம் இடத்தையும், நாம் தமிழர் கட்சி 7 இடங்களில் 3 ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.

மேலும் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்த நடிகர் பிரகாஷ்ராஜ் விரைவில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன் என்று தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.