இந்தியா

கடந்த 8 ஆம் திகதி முதல் தென்மேற்கு பருவமழை இந்தியாவில் பெய்து வருகின்றது.

இதன் ஒரு தொடர்ச்சியாக அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாகத் தீவிரமடைந்து மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் குஜராத்தை நோக்கி நகர்கின்றது. குஜராத்தின் விராவல் பகுதி அருகே வியாழக்கிழமை கரையைக் கடக்கவுள்ள இந்தப் புயலுக்கு வாயு என்று பெயரிடப் பட்டுள்ளது.

இந்த புயல் அரபிக் கடல் பகுதி வழியாக நகர்வதால் கடற்கரைப் பகுதிகளில் தான் அதிக மழை பெய்து வருகின்றது. கேரளாவில் சில மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தென்மேற்குப் பருவ மழை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தேனி, நீலகிரி ஆகிய பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழையும் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஆனாலும் மேற்கு திசையில் இருந்து வீசும் வறண்ட காற்று காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் புதன்கிழமை அனல் காற்று வீசும் என்று கூறப்படுகின்றது.

குஜராத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப் படுத்தப் பட்டு வரும் அதேவேளை தென்மேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் இன்னும் சில தினங்களுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் எச்சரிக்கப் பட்டுள்ளனர். இதேவேளை அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள வாயு புயலில் இருந்து தப்பிக்க இந்தியத் துறைமுகங்களில் சீனாவின் கப்பல்கள் தற்காலிக தஞ்சம் கோரியுள்ளன.

வாயு புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுவதால் குஜராத் உள்ளிட்ட மேற்கு கடலோரப் பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தான் மகாராஷ்டிராவின் ரத்தினகிரி துறைமுகத்தில் 10 சீனக் கப்பல்கலள் மனிதாபிமான உதவிகளைக் கோரியுள்ளதாக இந்தியக் கடலோரக் காவற்படை தெரிவித்துள்ளது.