இந்தியா

அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என நாம் அனைவரும் உறுதிமொழி ஏற்றுள்ள அரசியல் சாசனமே இன்று அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கிறதென லோக்சபாவில் தனது கன்னிப் பேச்சின் போது குறிப்பிட்டார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா

தேசியவாதம்தான் பாசிசத்துக்கான முதற்படி. நமது தேசம் பாசிசத்தை நோக்கி எப்படி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் ஏழு குறியீடுகளை இன்றைய உரையில் வரிசைப்படுத்த இருக்கிறேன் எனக் கூறித் தொடர்ந்தார்.

நாட்டின் குடிமக்களை குடியேறிகளெனக் கூறி, சொந்த வீடுகளில் இருந்து வீதிகளில் தூக்கி எறியும் அவலம் நடைபெறுகிறது. 50 ஆண்டுகாலமாக இங்கே வாழ்ந்து வரும் மக்கள் தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க ஒரு துண்டு சீட்டையாவது காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அமைச்சர்கள் தாங்கள் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்களை காட்ட முடியாத இந்தத் தேசத்தில், ஏழை அப்பாவி மக்கள் குடிமக்கள் என்பதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும் என்பது எவ்வகையான நியாயம் ?

நாட்டுப் பற்றை உறுதி செய்வதற்கான முழக்கமோ அடையாளமோ இல்லாத இந் நாட்டில், மதங்களை பரிசோதனை செய்யும் முழக்கங்கள் சொல்லி, பட்டப்பகலில் படுகொலை செய்யப்படும் துயரம் தொடருகிறது. கடந்த ஆண்டு ராஜஸ்தானில் தொடங்கி இன்று ஜார்க்கண்ட்டில் அன்சாரி வரை இந்த பட்டியல். நீண்டுள்ளது.

தொலைக்காட்சி சேனல்கள் ஆளும் கட்சியின் ஊதுகுழல்களாக மட்டுமே பிரசாரம் செய்யும் வகையில் இயங்குகின்றன. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை கண்காணிக்க 120 பேர் கொண்ட குழுவை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நியமித்திருக்கிறது. அரசுக்கு எதிரான கருத்துகள் அவற்றில் இடம்பெறுகிறதா என்பதை இந்த குழு கண்காணிக்கிறது.

இது போலிச் செய்திகளின் காலம். இவற்றின் அடிப்படையில்தான் இப்போது தேர்தல் நடைபெறுகிறது. பொய்யான செய்திகளை மீண்டும் மீண்டும் வெளியிட்டு அவற்றை உண்மையென நம்பவைக்கும் கோயபல்ஸ் யுக்தியே கையாளப்படுகின்றது.

வாரிசு அரசியலில், 1999-ம் ஆண்டில் இருந்து 36 அரசியல் வாரிசுகளை காங்கிரஸும், 31 அரசியல் வாரிசுகளை பாஜகவும் களமிறக்கியிருக்கிறது.

நாடு முழுவதிலும் ஒருவித அச்சநிலை நிலவுகிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய எதிரிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினரின் மரணம் என்பது 106% அதிகரித்துள்ளது.

மேல்நிலைப் பள்ளி பாடப்புத்தகங்கள் திட்டமிட்டு திருத்தப்படுகின்றன. மக்களை மீண்டும் இருண்டகாலத்துக்கு திருப்பி அழைத்துச் செல்ல முனைகிறது மத்திய அரசு எனத் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மகுவா மொய்த்ராவின் இக் கன்னிப் பேச்சு இந்தியாவின் சமகால அரசியலை சரியாக அடையாளம் காட்டியிருப்பதாக, ஆர்வலர்களும், ஊடகங்களும் பாராட்டுத் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.