இந்தியா

ஜப்பானின் ஒசாகா நகரில் வெள்ளிக்கிழமை ஜி 20 உச்சி மாநாடு தொடங்கியுள்ளது.

இரு நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா அடங்கலாக பல முக்கிய நாடுகள் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்க வியாழக்கிழமையே இந்தியப் பிரதமர் மோடி ஜப்பான் சென்றடைந்தார்.

இம்மாநாட்டில் இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்பை இந்தியப் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினா. இதன் போது இரு தலைவர்களும் ஈரானுடனான வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் 5ஜி மாபைல் நெட்வேர்க் சேவை போன்ற பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி அமெரிக்கா அண்மையில் அதன் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்ததுடன், அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடான ஈரானில் இருந்து இந்தியா உள்ளிட்ட எந்த நாடுகளும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என்றும் அமெரிக்கா நிபந்தனை விதித்தது. இதனால் இந்த விடயம் இம்முறை ஜி20 மாநாட்டில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இவ்விவகாரங்கள் ஊடகங்களுக்கு டிரம்ப் கூறுகையில், 'பிரதமர் மோடிக்கு கிடைத்தது மிகப் பெரிய வெற்றி என்றும் இந்தியாவில் மிகச் சிறப்பான பணிகளை அவர் ஆற்றியுள்ளார் என்றும் மோடியுடன் பேச ஆவலாக உள்ளேன்!' என்றும் தெரிவித்தார். மேலும் 'ஈரானுடனான வர்த்தகம் பற்றி பேசுவதற்கு அதிக நேரம் உள்ளது. அவசரம் தேவையில்லை. இன்னும் அதற்கான நேரம் வரவில்லை!' என்றார்.

மறுபுறம் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் 28 பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதித்துள்ளதாகவும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் இதைத் திரும்பப் பெற வலியுறுத்துவேன் எனவும் டிரம்ப் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஒசாக்காவில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே ஆகியோரிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தையும் இடம்பெற்றது.