இந்தியா

தமிழகத்தில் தற்போது முன்னெப்போதும் இல்லாதளவு தண்ணீர்ப் பிரச்சினை தலை விரித்தாடுகின்றது. இதற்குத் தீர்வு காண அரசியல் வாதிகள் உட்படப் பலரும் பல யோசனைகளைக் கூறி வருகின்றார்கள்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை அண்மையில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் இவ்விடயம் தொடர்பில் தன் கருத்தையும் தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், 'தண்ணீர் மற்றும் குடிநீர்ப் பிரச்சினையால் தவித்து வரும் தமிழக மக்களுக்கு உதவி செய்து வரும் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமாற பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இது போன்ற நல்ல விடயங்களை நாம் ஆரம்பத்தில் இருந்தே செய்து வரும் போதும் இப்போது தான் வெளியே தெரிய வருகின்றது.

குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக ஏரி குளங்களைத் தூர் வாரி அவற்றில் மழை நீரைச் சேகரிக்க வேண்டும். அண்மையில் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு நிச்சயமாக நதிநீர் இணைப்புக்களைச் செய்வார்கள்.

நடிகர் சங்கத் தேர்தலில் உரிய நேரத்தில் வாக்குச் சீட்டு கிடைக்காத காரணத்தால் வாக்களிக்க முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது.'

இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.