இந்தியா

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாதளவு மும்பையில் கனமழை பெய்து வருவதால் அங்கு இந்திய வானிலை அவதான நிலையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் பொது மக்கள் வதிவிடங்களை விட்டு வெளியேறாது பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளதுடன் மும்பைக் கடற்கரைப் பகுதிகளில் கடல் அலை சீற்றமும் பாரியளவு இருக்கும் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்திலும் மும்பை மற்றும் அதன் சுற்றுப் புறப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வழிகின்றன. சாலைகளும், ரயில் தண்டவாளங்களும் தண்ணீரில் பெரிதும் மூழ்கியுள்ளன. பஸ், ரயில் போக்குவரத்துத் தடைப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மும்பையின் பல பகுதிகளில் திங்கட்கிழமை 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் இந்த மோசமான காலநிலை காரணமாக ஏற்படுள்ள விபத்துக்களில் சிக்கி 16 பேர் வரை உயிரிழந்ததாகத் தெரிய வருகின்றது.

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மும்பையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதுடன் அங்கு அனைத்து அரச, தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. அவசர சேவைகள் மாத்திரம் செயற்பாட்டில் உள்ளதுடன் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என முதமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மும்பை கடற்கரைப் பகுதிகளில் அதிக பட்சமாக 3.76 மீட்டர் உயரத்துக்கு அலை எழும்பும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் கடலோரப் பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றப் பட்டுள்ளனர். இதேவேளை மகாராஷ்டிரா மாநிலத்திலும் கனமழை பெய்து வருவதால் புனேவிலுள்ள கல்லூரி சுவர் ஒன்று இடிந்து விழுந்து 6 பேர் பலியாகி உள்ளனர்.