இந்தியா

ஜூலை 8 திங்கட்கிழமை தமிழ்நாடு முழுதும் தண்ணீர் வழங்கப் போவதில்லை எனத் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்த வாபஸ் இனைத் திரும்பப் பெற்றுள்ளது.

முன்னதாக அரச அதிகாரிகள் தனியார் தண்ணீர் லாரிகளைச் சிறைப் பிடிப்பதைக் கண்டித்தே 25 000 தண்ணீர் லாரிகள் ஒடாது என ஸ்டிரைக் அறிவிப்பைக் குறித்த தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்திருந்தது.

சனி இரவு கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தின் போதே இந்த முடிவு எட்டப் பட்டுள்ளது. இதேவேளை ஒட்டு மொத்த சென்னை நகரமே குடிநீர்த் தேவைக்காக லாரிகளை நம்பியிருக்கும் தருணத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் பொது மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்விடயத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய தீர்வைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தனது டுவிட்டரில் கனிமொழி தெரிவித்து இருந்தார். சென்னையில் தனியார் தண்ணீர் லாரிகளை நம்பித் தான் பல அடுக்குமாடிக் குடியிருப்புக்கள், ஐடி நிறுவனங்கள், மருத்துவ மனைகள் மற்றும் உணவு விடுதிகள் என்பவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.