இந்தியா

சமீபத்தில் கர்நாடகாவில் ஆளும் கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி அளிக்கும் விதத்தில் 13 எம் எல் ஏக்கள் ராஜினாமா செய்திருந்தனர்.

ஆனால் தற்போது அமைச்சர் ஒருவரே தனது பதவியை ராஜினாமா செய்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குமாரசாமி முதல்வராக இருந்து வரும் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளக் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகின்றது.

அண்மையில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அங்கு ஆட்சியைக் கலைக்கவென கூட்டணியில் உள்ள இரு கட்சிகளில் இருந்து சில எம் எல் ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சித்து வந்ததாகத் தகவல் வெளியாகி வந்தது. இதனால் ஜூன் 14 ஆம் திகதி குமாரசாமி கர்நாடக அமைச்சரவையை விரிவு படுத்தினார். இதன் போது அவர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக கூட்டணியில் இருந்த காங்கிரஸில் பலருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற அதிருப்தி ஏற்பட்டது. மேலும் சுயேச்சை மற்றும் வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு குமாரசாமி அமைச்சர் பதவியை வழங்கினார். இதனால் காங்கிரஸ் சீனியர் எம் எல் ஏக்களுக்கு கோபம் ஏற்பட்டது.

இதனால் அடுத்தடுத்து 13 எம் எல் ஏக்கள் ராஜினாமா செய்து தமது கடிதங்களை சட்ட சபையிடமும், ஆளுனரிடமும் அளித்தனர். இதில் 10 பேர் காங்கிரஸ் கட்சியையும், 3 பேர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியையும் சேர்ந்த எம் எல் ஏக்கள் ஆவர். நிலமை மோசமடைந்ததை அடுத்து ஆட்சியைக் காப்பாற்றும் நோக்கில் குமாரசாமி அமைச்சர் பதவிகளைத் தனது விருப்பம் போல் அளித்துள்ள போதும் இவரது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாகேஷ் என்பவர் மும்பை செல்ல ஆயத்தமாகி விட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு பெரும் ஆட்டம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.