இந்தியா
Typography

நிலவின் சுற்றுப் பாதையில் அதனை ஆய்வு செய்த வண்ணம் அதன் தரை மேற்பரப்பில் ரோவர் வண்டியை இறக்கி ஆய்வு செய்வதற்காகவும் இன்னும் சில மணித்தியாலங்களில் சந்திராயன் 2 என்ற இந்திய விண்கலம் GSLVMK-III என்ற அதிசக்தி வாய்ந்த இஸ்ரோவின் ராக்கெட்டு மூலம் விண்ணில் ஏவப் படவுள்ளது.

இந்த ராக்கெட்டு ஏவப் பட்டு 973.7 வினாடிகளில் சந்திராயன் 2 அதில் இருந்து பிரிந்து நிலவை நோக்கிப் பயணிக்கும். கிட்டத்தட்ட 50 நாட்கள் கழிந்து இந்த விண்கலத்தில் இருந்து விக்ரம் எனப் பெயரிடப் பட்ட லேண்டர் நிலவின் தென் துருவத்தை அண்மிக்கும். இந்த லேண்டர் பூமியில் 14 நாட்களுக்குச் சமனான நிலவின் ஒரு நாளைக்கு ஏற்ற விதத்தில் அங்கு செயற்படும் என்று கூறப்படுகின்றது. உலக நாடுகளில் முதன் முதலாக சந்திரனின் தென் துருவத்தை ஆராயவுள்ள விண்கலம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

சந்திராயன் 2 இலிருந்து நிலவின் தரையில் இறங்கி ஆய்வு செய்யவுள்ள விண்வண்டி அதாவது ரோவருக்கு பிரக்யான் எனப் பெயரிடப் பட்டுள்ளது. 6 சக்கரம் கொண்ட இந்த ரோவர் வினாடிக்கு 1 செண்டி மீட்டர் வேகத்தில் 500 மீட்டர் வரை பயணிக்கக் கூடியது ஆகும். சூரிய ஒளி மூலம் இது இயங்கக் கூடியது. சுமார் 3.84 இலட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து நிலவை அடையவுள்ள சந்திராயன் 2 செயற்திட்டத்துக்கான மொத்த செலவு 978 கோடி ரூபாவாகும்.

திங்கள் அதிகாலை 2:51 மணிக்கு சுமார் 3850 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஏவப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS