இந்தியா
Typography

நிலவில் அமெரிக்க வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங் முதன் முதலில் கால் பதித்து எதிர்வரும் ஜூலை 20 ஆம் திகதியுடன் 50 வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தால் இன்று திங்கள் அதிகாலை 2.51 மணிக்குத் திட்டமிடப் பட்ட சந்திராயன் 2 இன் ஏவுகை திடீர் தொழிநுட்பக் கோளாறினால் விண்ணில் ஏவ 56 நிமிடங்கள் இருந்த நிலையில் கைவிடப் பட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தில் முதன் முறையாக ரோவர் வண்டியை இறக்கி ஆய்வு செய்யவிருந்த இந்த சந்திராயன் 2, GSLV 3M1 ரக ராக்கெட்டு மூலம் விண்ணுக்கு ஏவப்படவிருந்தது. பல மாதங்களாக நன்கு திட்டமிடப் பட்ட போதும் விண்ணில் ஏவப் பட முன்பு கிரையோஜெனிக் எஞ்சின் என்ற அதன் வால்வுப் பகுதியில் எரிபொருள் கசிவு கண்டு பிடிக்கப் பட்டதை அடுத்து இதன் ஏவுகை தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளது. ஏற்பட்டிருக்கும் தொழிநுட்பக் கோளாறு சற்று சிக்கலானது என்றும் இதனால் இனி இந்த ராக்கெட்டு எப்போது ஏவப் படும் என்பதை உடனடியாகச் சொல்ல முடியாது என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

2008 ஆக்டோபர் 22 ஆம் திகதி இஸ்ரோவின் முதல் சந்திராயன் செய்மதி நிலவின் வடதுருவத்தில் தரை இறங்கி 312 நாட்கள் ஆய்வு மேற்கொண்டது என்பதுடன் நிலவில் பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதையும் உறுதிப் படுத்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. சந்திராயன் 2 திட்டத்தில் நிலவின் ஆர்பிட்டரில் வலம் வரும் 2379 கிலோ எடை கொண்ட செய்மதி, தரையில் இறங்கக் கூடிய 1471 கிலோ எடை கொண்ட லேண்டர் மற்றும் அதில் இருந்து வெளியேறி 500 மீட்டர் வரை ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் 27 எடையுடைய ரோவர் வண்டி போன்றவை அடங்கியுள்ளன.

இந்த அனைத்து விண்கலங்களிலும் அதிநவீன கமெராக்கள், எக்ஸ் ரே கருவிகள், வெப்ப நிலையை ஆய்வு செய்யும் கருவிகள், லேசர் தொழிநுட்பத்தில் செயற்படக் கூடிய கருவிகள் என 13 வகையான அம்சங்கள் உள்ளன. சுமார் 45 நாட்கள் விண்ணில் பயணித்து செப்டம்பர் 6 ஆம் திகதி அளவில் தென் துருவத்தை அடையவிருந்த சந்திராயன் 2 இல் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் ரெட்ரோ ரிப்ளெக்டர் என்ற கருவியும் இணைக்கப் பட்டுள்ளது.

மிகவும் சிக்கலான திட்டமிடல் அம்சங்கள் கொண்ட இந்த சந்திராயன் 2 செயற்திட்டம் மூலம் நிலவுக்கு மீளவும் மனிதர்களை அனுப்புதல் மற்றும் அங்கு மனித குடியேற்றங்களை அமைத்தல் போன்ற மனித இனத்தின் வருங்காலத் திட்டங்களுக்கு மிகவும் உதவக் கூடிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கோளாறுகள் விரைவில் சரி செய்யப் பட்டு சந்திராயன் 2 இனை விண்ணுக்கு ஏவும் திகதி விரைவில் அறிவிக்கப் படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS