இந்தியா
Typography

அண்மையில் இந்தியா காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை 2 ஆகப் பிரித்து அதிரடி நடவடிக்கை எடுத்திருந்தது. இதற்குப் பாகிஸ்தான் தற்போது பதிலடி கொடுக்கும் விதத்தில் தீவிர எதிர்வினை ஆற்றியுள்ளது.

அதாவது இந்தியாவுடனான, தூதரக உறவு, வர்த்தக உறவு உட்பட அனைத்து வித உறவுகளையும் முறித்துக் கொள்வதாகப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

மேலும் இந்தியத் தூதர்களையும் நாட்டை விட்டு அனுப்ப முடிவு செய்துள்ளது. இரு நாட்டுக்கும் இடையேயான ஏற்றுமதி மற்றும் இறக்குமதியும் ரத்து செய்யப் பட்டு வாகா எல்லை மூடப்படுவதாகவும் இனி பேருந்து போக்குவரத்தும் கூட இருக்காது என்றும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதனால் உலக அரங்கில் கடும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.

இது தவிர இந்தியாவுடன் பாகிஸ்தான் இதற்கு முன்பு செய்து கொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வுகளும் பரீசீலிக்கப் பட்டு பின் உரிய முடிவு எடுக்கப் படும் என்றும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நடந்த இந்த அதிரடி மாற்றங்கள் குறித்து ஐ.நா பொதுச் சபை மற்றும் பாதுகாப்புச் சபையில் முறையிட பாகிஸ்தான் முடிவெடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்துள்ள பாகிஸ்தான் அதற்கு முதல் நாள் கொண்டாடப் படும் பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை காஷ்மீர் போராளிகளுக்கு மரியாதை செலுத்த மாத்திரம் பயன்படுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்