இந்தியா
Typography

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நிலவை நோக்கிப் புறப்பட்ட இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து நிலவின் தென் துருவத் தரையில் இறங்கவிருந்த விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் துண்டிக்கப் பட்டதால் அது தரையில் வேகமாக மோதியிருக்கலாம் என அஞ்சப் படுகின்றது.

சனி இரவு 1.37 மணிக்கு நிலவில் சந்திரயான் 2 ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் தரையிறங்கும் செயற்பாடு ஆரம்பமானது. எதிர்பார்த்த படி rough breaking எனப்படும் முதற்கட்டம் வெற்றிகரமாக நிறைவேறியது. அடுத்த கட்டமான fine breaking இன் போது விக்ரம் இலிருந்து வந்த சிக்னல் திடீரெனத் தடைப்பட்டது. இதனால் விக்ரம் இன் இறுதி செயற்திட்டத்தில் சிக்கல் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்ற அச்சம் இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் ஏற்பட்டது.

இந்த முக்கிய நிகழ்வை இணையம் மற்றும் தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்துக் கொண்டிருந்த இந்திய மக்கள் மாத்திரமல்ல மொத்த உலகும் சோகத்தில் ஆழ்ந்தன. இதை அடுத்து இஸ்ரோ தலைவர் சிவன் இந்தியப் பிரதமர் மோடிக்கும் பொது மக்களுக்கும் இத்தகவலை வெளியிட்டார்.

அதாவது, 'நிலவின் மேற்பரப்பில் இருந்து 2.1 km வரை விக்ரம் லேண்டர் இன் செயற்பாடு குறித்த தெளிவான சிக்னல்கள் கிடைத்து வந்தது. பின் அதனுடனான தொடர்பு துண்டிக்கப் பட்டு விட்டது. கிடைக்கப் பட்ட தகவல்களை ஆராய்ந்து வருகின்றோம். விக்ரம் லேண்டர் நிலவில் மோதி இருக்க வாய்ப்பு உள்ளது.'

அண்மையில் வெளியான செய்தியின் படி நிலவில் விக்ரம் தரையிறங்கி இருக்கும் பகுதி ஸ்கேனிங் மூலம் அறியப் பட்டுள்ளதாகவும் விரைவில் அதனுடன் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.

விக்ரம் லேண்டருக்குள்ளே இருந்து வெளியே வந்து நிலவின் தரையில் ஆய்வு செய்யவிருந்த பிரக்ஞான் ரோவர் இனது ஆய்வுக் காலம் 14 புவி நாட்கள் தான் என்ற போதும் சந்திரயான் 2 ஆர்பிட்டரின் ஆய்வுக் காலம் மிக அதிகமாகும். இதில் அதிக எரிபொருள் இருப்பதால் சுமார் 7.5 ஆண்டு காலம் நிலவைச் சுற்றி வந்து இது ஆய்வு செய்யக் கூடியதாகும்.

இந்த ஆர்பிட்டர் நிலவின் துருவங்களில் நீர் மற்றும் கனிமங்கள் எங்கிருக்கின்றன என்று ஆய்வு செய்யும். இதனால் இஸ்ரோவின் இந்த செயற்திட்டம் 95% வீதம் வெற்றி பெற்றிருப்பதாகவே கருதப் படுகின்றது.

நிலவின் தென்துருவப் பிரதேசம் குறித்து நடைபெற்ற ஆய்வு முயற்சிகளில், சந்திராயன்2 செயற்பாடு முக்கியமானது. மிகக் கடினமான பணியில் குறிப்பிடத்தக்க வெற்றி கண்டுள்ளனர். சூரியன் தொடர்பான ஆய்வுகளில், இஸ்ரோ விஞ்ஞானிகளை இணைத்துச் செயற்பட விரும்புகின்றோம் என நாசா வின்வெளி ஆராச்சி நிலையம் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சந்திராயன்2 ஆய்வு முயற்சியில் ஈடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளையும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்