இந்தியா

தமிழகத்தில் இன்று 30,000 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தினைத் தொடங்கியதால் வங்கிச் சேவைகள சீர்குலைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்து பொதுத்துறை வங்கிகளை இணைத்து நான்கு வங்கிகளாக மாற்றப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவித்திருந்தார். இவ்வாறான இணைப்பால் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி, வங்கி அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் இதற்கான கடும் எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான வங்கிகள் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டுமெனக் கோரி இன்றைய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள் இன்றைய ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

வங்கி ஊழியர்களின் இன்றைய போராட்டத்தினால், வங்கிச் சேவைகள் பெரிதும் பாதிப்புற்றன. தீபாவளிப் பண்டிகைக் காலமாகையால், வங்கிச் சேவைப் பயனாளர்களான, பொதுமக்கள் வர்த்தகர்களது நடடிவக்கைகள் பெரிதும் பாதிப்புற்றன எனத் தெரிய வருகிறது. இதேவேளை இவர்களது போராட்டத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.