இந்தியா

தமிழர்களின் பெருமைமிகு பிரதேசமாமான தஞ்சைப்பகுதியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது பெரும் விசனத்தைத் தோற்றுவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தாய்லாந்தில் மேற்கொண்டிருக்கும் சுற்றுப் பயணத்தின் போது அங்குள்ள இந்தியர்களைச் சந்தித்து உரையாடினார். அவர்கள் மத்தியில் உரையாற்றுகையில், தமிழ்மொழி மற்றும் திருக்குறள் சிறப்புக்கள் குறித்துப் பேசினார்.இதன் பின்னதாக சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள் பலவாக எழுந்தன.

இந்நிலையில் , தஞ்சை பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மீது அடையாளந் தெரியா மர்ம நபர்கள் சாணி வீசி அவமரியாதை செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. இச் செயலினால், திருவள்ளுவர் சிலையின், முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் சாணி ஒட்டியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருவதாக அறியவருகிறது.

பிரதமர் அன்மைக்காலமாக தமிழ்மொழியைப் பெருமைப்படுத்தும் விதமாக தனது உரைகளில் பேசி வருவது, அரசியல் உள் நோக்கம் கொண்டது என்னும் வகையிலான விமர்சனங்கள் தமிழகத்தில் பரவலாக, குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பரிமாறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.