இந்தியா

முரசொலி அலுவலக நிலம் பஞ்சமி நிலமை அல்ல என திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் உறுதிபடக் கூறியுள்ளார்.

பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ், முரசொலி அலுவலக நிலம் பஞ்சமி நிலம் எனக் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சை டெல்லி வரை சென்றுள்ள நிலையில், இது தொடர்பான அறிக்கை ஒன்றினை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முரசொலி" என்பது வெறும் நாளேடு மட்டுமல்ல; அது தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளை. ஒவ்வொரு கழகத் தொண்டனின் உயிர் மூச்சு. தற்காலிக அரசியல் லாபத்திற்காக, அதன் மீது, பழி சுமத்துவதை நான் மட்டுமல்ல; கழகத்தின் எந்தத் தொண்டரும் ஏற்க மாட்டார்கள்.

முரசொலி நிலம் குறித்த அபாண்டப் பழியை, உரிய அதிகாரம் படைத்திட்ட ஆணையத்திடம், தேவையான நேரத்தில் ஆதாரங்களுடன் வழங்கி, அதன் உண்மைத் தன்மையை நிரூபிப்பேன்! என, கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளுக்கு உறுதியளிக்கிறேன். இந்த உறுதியே, வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதியான பதிலாய் அமையுமெனக் கருதுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.