இந்தியா

"கமல் நம்மவர் இல்லை, உங்களவர்" என என் குடும்பத்தினர் சொல்வது உண்மைதான். நான் சொல்ல வேண்டுமென நினைத்ததை அவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

மக்கள் நீதி மய்யத்தின் மூலம் எனக்குக் கிடைத்த உறவுகள், என் சொந்த உறவுகளை விட அதிகம். ஆகவே நான் உங்களவன் தான் என, தனது பிறந்தநாள் விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

அவரது சொந்த ஊரான பரமக்குடியில், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் அவர் தனது தந்தையின் சிலையை திறந்து வைத்துப் பேசினார். அரசியலுக்கு நான் வருவதை என் குடும்பத்தில் யாரும் விரும்பவில்லை. ஒரே ஒரு மனிதர் தான் அரசியலுக்கு வர வேண்டும் என நினைத்தார். அவர் நினைத்தபடி நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.

சலூன் கடையொன்றில் ஒன்றரை மாதம் பணியாற்றியது, எனது வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தேவையான பல அனுபவங்களைக் கற்றுக் கொடுத்தது. பெரிய நகரங்களில் முடி திருத்துபவர்களுக்கு ஒரு லட்சம் வரை ஊதியம் கிடைக்கிறது. எந்த தொழிலாக இருந்தாலும் அதனைத் திறம்படவும், மகிழ்ச்சியடனும் செய்ய வேண்டும்.

இலவசங்களைக் கொடுத்து மக்களின் மனநிலையை கெடுத்துவிட்டார்கள் இங்கே. பள்ளி கல்வியை முடித்தவர்கள், உயர்கல்வி தொடங்க முடியாத துயரமான நிலை இங்கேயுள்ளது. அவ்வாறான நிலையிலுள்ளவர்களுக்காக, திறன் மேம்பாட்டு பயிலகம் இங்கு துவங்கப்படும் பயிலகம் போன்று விரைவில் அனைத்துப் பகுதிகளிலும் துவங்கப்படும். இதனால் கிராமங்கள் வளர்ச்சியுறும். அங்குள்ள இளைஞர்கள் பலன் பெறுவர் எனக் குறிப்பிட்டார்.