இந்தியா
Typography

அண்மையில் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இரு தமிழ்ப் பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 34 ஆவது இடத்தில் உள்ளார். முதலாவது இடத்தில் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்கெல் இடம்பெற்றுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இன்னொரு பெண்மணியான ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா 54 ஆவது இடத்தில் உள்ளார்.

இவர் எச்.சி.எல் கார்ப்பரேஷின் தலைமை நிர்வாக அதிகாரியாவார். ஒவ்வொரு ஆண்டும் அரசியல், தொழில்துறை, கருணை உள்ளவர்கள் மற்றும் ஊடகங்களில் தலைமைப் பண்பு ஆகிய குணநலன்களின் அடிப்படையில் உலக அளவில் சிறந்து விளங்குபவர்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டு வருகின்றது. இவ்வருடம் வெளியான பட்டியலில், 2 ஆவது இடத்தில் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் என்பவரும் 3 ஆவது இடத்தில் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி என்பவரும் உள்ளனர்.

இதை விட இந்தியாவில் கடின முயற்சி காரணமாக செல்வந்தரான எம்.எஸ்.மஜும்தார் ஷா இப்பட்டியலில் 65 ஆவது இடத்திலுள்ள இன்னொரு இந்தியப் பெண்மணியாவார். இப்பெண்மணி இந்தியாவின் மிகப்பெரும் உயிர் மருந்துத் தயாரிப்பு நிறுவனமான பயோகான் இனது நிறுவனர் ஆவார். மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை நிறுவன இணைத் தலைவர் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் 6 ஆவது இடத்திலும், ஐபிஎம் தலைமை நிர்வாக அதிகாரி ஜின்னி ரோமெட்டி 9 ஆவது இடத்திலும், பேஸ்புக் சிஇஓ ஷெரில் சாண்ட்பெர் 19 ஆவது இடத்திலும், நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் 38 ஆவது இடத்திலும் உள்ளனர்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் முதல் மகள் இவான்கா டிரம்ப் 42 ஆவது இடத்திலும், டென்னிஸ் வீராங்கணை செரினா வில்லியம்ஸ் 81 ஆவது இடத்திலும், சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் 100 ஆவது இடத்திலும் உள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS