இந்தியா

“ஆர்.எஸ்.எஸ்.சின் பிரதமரான நரேந்திர மோடி, பாரத மாதாவிடம் பொய் சொல்கிறார்.” என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ‘குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பின்னர், தேசிய குடிமக்கள் பதிவேடு கண்டிப்பாக அமல்படுத்தப்படும்,’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

‘தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் அமலுக்கு வந்தால் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிப்பதற்கான பழைய ஆவணங்கள் தேவை. அவ்வாறு இல்லாதவர்கள் தடுப்பு மையங்களில் அடைக்கப்படும் சூழல் ஏற்படும்,’ என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டை மறுத்த பிரதமர் மோடி, ‘நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் தடுப்பு மையங்கள் கட்டப்படவில்லை,’ என தெரிவித்துள்ளார். ஆனால், தடுப்பு மையம் விவகாரத்தில் மோடி பொய் சொல்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஆர்எஸ்எஸ்.சின் பிரதமரான மோடி, பாரத மாதாவிடம் பொய் கூறுகிறார்,’ என தெரிவித்துள்ளார். மேலும், ‘காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும், ‘நகர்ப்புற நக்சல்கள், முஸ்லிம்கள் தடுப்பு மையங்களில் அடைக்கப்படுவார்கள்,’ என வதந்தியை பரப்பி வருவதாக மோடி பேசும் வீடியோவையும், அசாமில் தடுப்பு மையம் கட்டப்பட்டு வரும் வீடியோவையும் ராகுல் இணைத்துள்ளார்.