இந்தியா

காந்தி நாடு தற்போது ஹிட்லர் பாதையில் செல்வதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். 

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கருத்தரங்கம் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று மாலை நடைபெற்றது.

விழாவுக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் அருணன் தலைமை தாங்கினார். காயிதே மில்லத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் தாவூத் மியாகான் வரவேற்புரையாற்றினார்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் கரத், எம்.பி.க்கள் ப.சிதம்பரம், கனிமொழி, தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றனர். தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் ப.சிதம்பரம் எம்.பி. பேசியதாவது, “குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட 15 நாட்களில் மாபெரும் புரட்சி, நாடு முழுவதும் நடந்து இருக்கிறது. அதற்கு அரசியல் கட்சிகள் காரணமல்ல. இந்த போராட்டத்துக்கு மாணவர்களும், இளைஞர்களும் சொந்தக்காரர்கள் ஆவார்கள். நாடு முழுவதும் அவர்களாகவே முன்வந்து போராடுகிறார்கள். அரசியல் சாசனத்தின் அடிப்படை நெறிமுறைகளை காப்பாற்ற திரண்டு இருக்கிறார்கள். இதில் அரசியல் கட்சிகள் தோல்வியடைந்து விட்டன. போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவிக்கிறேன்.

எல்லாப் பாகுபாடுகளையும் மறந்து மிகப்பெரிய புரட்சியை மாணவர்கள் செய்கிறார்கள். இது முஸ்லிம்களுக்கும், அரசுக்கும் நடக்கும் போராட்டம் அல்ல. இந்த அரசு அப்படி சித்தரிக்கிறார்கள். இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும், அரசுக்கும் நடக்கும் போராட்டம் தான் இது. சரித்திரம் திரும்புகிறது என்று சொல்லும் அளவுக்கு ஜெர்மனியில் நடந்தது போல இந்தியாவிலும் நடக்கிறது. காந்தி நாடு ஹிட்லர் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

எதையும் எடுத்துச் சொன்னால் குதர்க்கமாக வாதம் வைக்கிறார்கள். சட்டம் செல்லுமா? செல்லாதா? என்று பேசாமலேயே சட்டத்தை நிறைவேற்றுவது அபத்தம். பிரதம மந்திரி, உள்துறை மந்திரியின் வார்த்தை மீது மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. இரண்டு பேரும் மக்களுடைய அவநம்பிக்கையை சம்பாதித்து இருக்கிறார்கள். இப்போது இருக்கும் அரசு இந்து தேசம் அமைக்க பார்க்கிறார்கள்.

இந்தியாவில் இருக்கும் 130 கோடி மக்களும், இந்துக்கள் என்று சொல்கிறார்கள். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. இந்து தேசம் என்ற வந்தால் மலைவாழ் மக்கள், தலித் மக்கள், பின்தங்கிய மக்கள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள். இந்து தேசம் என்றால் உயர் சாதி, நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் தான் வரும். மிகுந்த எச்சரிக்கையுடன் நாம் இருக்க வேண்டும். மாணவர்கள், இளைஞர்கள் சக்தி நம்மை வழி நடத்தட்டும். நாம் அவர்கள் பின்னாலேயே போவோம். இந்திய மக்கள் ஒன்றுபட்டால் பெரும் புரட்சி செய்ய முடியும்.” என்றுள்ளார்.