இந்தியா

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் தர பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதில் எந்த உள் நோக்கமும் இல்லை என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசிடம் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பை கடந்த 2017ஆம் ஆண்டு பெற்றுத் தந்தனர். அதேபோல், எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பாதுகாப்பு தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டது.

அதன் முடிவில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை ரத்து செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, ஓ.பி.எஸ்., முக ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வேண்டாம் என கருதியதால் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். அந்த வகையில் தனக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.