இந்தியா
Typography

சிலநாட்களுக்கு முன் சினிமா நிதியாளர் அன்புச் செழியன் வீட்டில் வருமான வரித்துறைச் சோதனை நடத்தியதில் சுமார் 77 கோடி ரூபா கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி, ஊடகங்களில் பரபரப்பானது.

நேற்று மற்றும் ஒரு அன்புச்செழியன் வீடு உட்பட பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதாகத் தகவல்கள் வெளியாகியள்ளன. ஆனால் இது காவல்துறை உயரதிகாரியாக இருந்த அன்புச் செழியனின் வீட்டில் நடைபெற்ற சோதனை.

தமிழகக் காவல்துறைக்கு வாக்கி - டாக்கி வாங்கிய டென்டரில் நடைபெற்ற ஊழல் தொடர்பாகவே இந்தச் சோதனை நடைபெற்றுள்ளது. இதில் 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவில், போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய அன்புச்செழியன் உட்பட 16 போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகள், மற்றும் இந்த டெண்டரினை எடுத்த நிறுவனத்துக்குச் சொந்தமான இரு இடங்கள் உள்பட மொத்தம் 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனை மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தமிழக போலீஸ்துறைக்கு வாக்கி-டாக்கி, செல்போன், சி.சி.டி.வி. கருவிகள், டெப்லேட், ஜி.பி.எஸ்.கருவி, பேட்டரி உள்பட கருவிகள் வாங்குவதில் 2016-2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தொழில்நுட்ப பிரிவு போலீஸ் சூப்பிரண்டு அன்புச்செழியன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான செயல்பாடுகள் மூலம் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுத்தி உள்ளார் என்று புகார் பெறப்பட்டது.

எனவே அரசு உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள், 2 தனியார் நிறுவனங்கள் மீது கடந்த 7-ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக வழக்கில் சிக்கிய அதிகாரிகள், தனி நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என 18 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. அவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊழல் விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS