இந்தியா
Typography

தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி தொடர்பில் சம்பந்தப்பட்ட கட்சி 48 மணி நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்ற அமர்வு பரபரப்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, இனி வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை 48 மணி நேரத்தில் கட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

அதை பிராந்திய நாளிதழ்களிலும் சமூக வலைதளங்களிலும் பதிய வேண்டும். வேட்பாளர்களின் நற்சான்றுகளுடன் அவர்களின் குற்றப்பின்னணியையும் வெளியிட வேண்டும். மேலும், குற்றப்பின்னணி உடைய ஒருவரை ஒரு கட்சி வேட்பாளராக அறிவிக்கும்பட்சத்தில், அவரது குற்றப்பின்னணியையும் தாண்டி எதற்காக அவரை வேட்பாளராக தேர்தெடுத்தோம் என்பதையும் கட்சி 72 மணி நேரத்தில் விளக்க வேண்டும்.

இந்த விதிமுறையை அரசியல் கட்சிகள் பின்பற்றத் தவறினால், தேர்தல் ஆணையம் அந்தக் கட்சிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டுகளில் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS