இந்திய குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக டெல்லியில் பெப்ரவரி மாதம் 23, 24, 25 ந் திகதிகளில் நடைபெற்ற கலவரங்களின் போதான சேத விபரங்கள் குறித்த முதலாவது இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்ற குழுரீதியான ஆய்வுகளின் அடிப்படையில், இந்த இடைக்கால சேத விபர அறிக்கை முதல் தகவலாக வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்னும் முழுமையான மதிப்பீடுகள் முடிவடையவில்லை எனவும், பெரும்பாலும் இந்த வார இறுதிக்குள் சேத மதிப்பீடு முழுவதும் பதிவாகிவிடும் எனகவும் தெரிவிக்கப்படுகிறது.
கலவரங்களில் கொல்லப்பட்டோர் 46, காயம் அடைந்தோர் 300 க்கும் அதிகம். இவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கலவரம் நடைபெற்ற டெல்லி வடகிழக்கு பகுதியில் 122 வீடுகள் முழுமையாக எரிந்துள்ளன. 322 கடைகள் தீ வைத்தும், அடித்து நொறுக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களென மொத்தம் 301 வாகனங்கள் கலவரக்காரர்களால் எரிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை, விபரங்களின் முழுமையான தொகுப்பு வெளியிடப்படுகையில் மேலும் உயர வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இக் கலவரம் தொடர்பாக 369 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடந்து வருவதாகவும், 1,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் தேடப்பட்டு வருவதாகவும் அறிய வருகிறது.