இந்தியா
Typography

இந்தியப் பிரதமர் நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையைக் கேட்டபின் அவருக்கு அனுப்பிய கடிதத்தை ட்விட்டர் மூலம் பகிர்ந்துள்ளார் சிபி எம்பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி. அதில் மக்களிடம்தான் எல்லாவற்றையும் கேட்கிறீர்கள்; ஆனால், மக்களுக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அவர் எழுதிய கடிதத்தில்,


அன்பிற்குரிய பிரதமர் அவர்களே,

பயங்கரமான கோவிட்19 காலக்கட்டத்தில், தாங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த ஆண்டு நாம் காந்தியின் 150வது பிறந்தநாளைக் காணவிருக்கிறோம். இந்த நேரத்தில் தேசப்பிதா என் நினைவுக்கு வருகிறார்.

என்றென்றும் நினைவில்கொள்ள வேண்டிய சூத்திரம் ஒன்றை அவர் நமக்கு வழங்கினார். “நீங்கள் பார்த்திருக்கக்கூடிய ஒரு ஏழை, ஒரு நலிவுற்றவர் முகத்தை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒரு நடவடிக்கை எந்த வகையிலாவது அவருக்கு உதவியாக இருக்குமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்,” என்றார் அவர். இந்தியா நடத்தியாக வேண்டிய கோவிட்-19க்கு எதிரான யுத்தத்தில் உங்களுடைய உரையில் அல்லது உங்கள் அரசின் அணுகுமுறையில் இந்தச் சூத்திரத்தின் சொற்களையோ உணர்வையோ காட்டுகிற எதையும் எம்மால் பார்க்க முடியவில்லை.

நாடு முழுவதும் 21 நாட்கள் முற்றாக முடக்கம் என்று அறிவித்த தங்களது உரையை நாங்க்ள் கவனித்தோம்.

ஏழைகளுக்கும் உதவிகள் தேவைப்படுவோருக்கும் நிவாரணம் வழங்க, இந்த ஊரடங்குக் காலத்தில் அவசர உதவிகள் தேவைப்படுகிறவர்களின் அவதியைப் போக்க இதுவரையில் எவ்விதத் திட்டவட்டமான நடவடிக்கைகளும் அறிவிக்கப்படவில்லை என்பதில் நாங்கள் பெருத்த ஏமாற்றமடைகிறோம்.

இத்தகைய நாடுதழுவிய முடக்கத்தால் மிகமிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாகப் போகிற புலம்பெயர்ந்து வாழ்கிற ஏழைகளுக்கு உதவுவதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. அவர்களில் பெரும்பாலோர் உணவோ தங்குமிடமோ இல்லாமல் நடுவழியில் சிக்கியிருக்கிறார்கள். பாதுகாப்பான இடங்களை அவர்கள் எப்படி அடைவார்கள்? பணமோ உணவோ இல்லாதவர்களாக, காவல்துறை துன்புறுத்தல்கள் பற்றிய செய்திகளும் வந்துகொண்டிருக்கும் நிலையில் அவர்கள் எப்படித் தாக்குப்பிடித்து வாழ்வார்கள்? தங்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாத நிலையில், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான பணமும் வழங்கப்படாத நிலையில் அவர்கள் தங்களது பாதுகாப்புக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்களே, அவசரத்தோடும் அச்சத்தோடும் ஓடிக்கொண்டிருக்கிறார்களே.

கிட்டத்தட்ட 45 கோடி இந்தியர்கள் அன்றாடக் கூலி வேலை செய்து பிழைக்கிறவர்கள். நிச்சயமற்றதாகியுள்ள அவர்களது வாழ்கை குறித்த அக்கறையுள்ள எந்த நடவடிக்கையும் இல்லாமல் அறிவிக்கப்பட்ட 21 நாள் முடக்கம் காரணமாக ஏராளமான வேலைகள் தொலையவுள்ள நிலையில், அவர்களது வாழ்க்கைக்கும் கூலிப் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது, அத்துடன் எவ்விதமான உத்தவரவாதமும் வராத நிலையில் அவர்களுடைய வாழ்க்கை பெருந்துயரத்திற்கு உள்ளாகியுள்ளது. இது கொடுந்தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை நடத்துகிற இத்தருணத்தில் நமக்குத் தேவைப்படுகிற ‘சமூக தனிமை’ என்பதற்கே நேர் எதிரானதாகும்.

சுகாதார நடவடிக்கைகளுக்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்ற அறிவிப்பை மறுபடியும் ஆச்சரியத்தோடு கேட்டோம். 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் பற்றியும், பொருளாதாரக் களத்தில் வேகமான பாய்ச்சல்கள் ஏற்பட்டு வருவதாகவும் நீங்கள் பேசுவதை அடிக்கடி நாங்கள் கேட்கிறோம். அதையெல்லாம் உண்மையென எடுத்துக்கொள்வதானால் வெறும் 15,000 கோடி ரூபாய்தான் நம்மால் ஒதுக்கீடு செய்ய முடியுமா? இது குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 112 ரூபாய் என்ற சொற்பத் தொகைதான் ஒதுக்கப்படுவதாகிறதே? பணக்காரக் கார்ப்பரேட்டுகளுக்கு நெருக்கடி மீட்பு நிதியாக 7.78 லட்சம் கோடி ரூபாய் வழங்க முடிந்தது என்கிறபோது, அவர்களுக்கு 1.78 லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை அளிக்க முடிந்தது என்கிறபோது, இன்று கடுமையானதொரு அபாயத்தை எதிர்கொண்டுள்ள நமது மக்களுக்கு நீங்கள் இதை விட அதிகமாக ஒதுக்கியிருக்க முடியும். ஏழைகளின் உயிரைக் காப்பதற்கான நிதியை வழங்க் நீங்கள் ஏன் பெரும் பணக்காரர்களிடம் வரி வசூலிக்கக்கூடாது?

உலகளாவிய இந்த நோய்த்தொற்றுக்கான வாய்ப்பு கண்முன்னால் தெரிந்த நிலையிலும் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கான அரசின் செலவினங்கள் உண்மையில் கீழிறங்கியது கண்டு ஏற்கெனவே அதிர்ச்சியடைந்திருந்தோம். முக்கிய மருத்துவமனைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டன, ஏஐஐஎம்எஸ் மருத்துவமனைக்கான ஒதுக்கீட்டில் 0.1 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டது. மிகப்பெரிய அளவுக்கு நிதி வெட்டப்பட்டது தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்திற்குத்தான் (ராஷ்டிரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா) – 156 கோடி ரூபாயிலிருந்து வெறும் 29 கோடி ரூபாயாக அது வீழ்ச்சியடைந்தது. ஆயுட்கால மருத்துவ சிகிச்சைக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கான நிதி அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றாலும், ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த அதே 6,400 கோடி ரூபாய்தான் மாற்றமின்றி இப்போதும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கான நிதி ஒதுக்கீடு 360 கோடி ரூபாயிலிருந்து 283. 71கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டது. அதிர்ச்சிகரமான முறையில், தொற்றக்கூடிய நோய்களைக் கையாளுவதற்கான திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மாற்றமின்றி 2,178 கோடி ரூபாயாகவே இருந்தது.

இந்தச் செலவினங்களை உங்கள் அரசாங்கம் கிரிமினல்தனமாக வெட்டுகளைச் செய்தது என்ற நடப்புநிலை, இந்தியாவுக்கு மிக அபாயகரமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. கோவிட்-19 நோயைக் கையாளுவதற்குக் கிட்டத்தட்ட இரண்டரை மாத அவகாசம் இந்தியாவுக்குக் கிடைத்தது என்றபோதிலும், அதிகமான, விலை குறைந்த பரிசோதனைக் கருவிகளைப் பெறுவதற்கோ, கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளைக் கண்டறிவதற்கோ, கூடுதலான முகமூடிகளையும் சுவாசக்கருவிகளையும் வாங்குவதற்கோ எதுவும் செய்யப்படவில்லை. இந்த மிக முக்கியமான கருவிகளின் ஏற்றுமதிக்கு மார்ச் 24 வரையில் அரசாங்கம் எவ்விதக் கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

மாநில அரசாங்கங்கள் சுகாதார நடவடிக்கைகளில் கூர்ந்த கவனம் செலுத்த வேண்டியதன் தேவை குறித்தும் நீங்கள் பேசினீர்கள். ஆனால் இப்படிப்பட்ட ஒரு பதற்றமான தருணத்திலமு பார்திய ஜனதா கட்சி எப்படி மத்தியப் பிரதேசத்தில் ஜனநாயகப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியைக் கவிழ்ப்பதில் ஈடுபட்டது என்பதையும், உங்களுக்குத் தேவையான சில சட்டங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே நாடாளுமன்றத்தை நடத்தியது என்பதையும மறந்துவிட்டீர்கள் போலும்.

இடதுசாரிகள் தலைமையிலான கேரள அரசாங்கமும், எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள வேறு சில மாநிலங்களும் பரிசோதனை, பாதிக்கப்பட்டோரைத் தேடிக் கண்டுபிடிப்பது, பொது சுகாதாரத்திற்கு உயர் முக்கியத்துவம் அளிப்பது, அத்துடன் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கான குறிப்பிடத்தக்கப் பொருளாதார ஏற்பாடுகளைச் செய்வது என்று நல்ல முறையில் செயல்பட்டுள்ளன. இதற்கு ஒருபோதும் உங்களிடமிருந்து ஒரு அங்கீகாரம் கூட வந்ததில்லை, அதற்கப்புறமல்லவா அவர்களுடைய முயற்சிகள், செயலாற்றல், நிர்வாகத் திறன், உணர்வு ஆகியவற்றைப் பின்பற்றுவது.

இந்த கடுமையான காலக்கட்டத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் உரியதை நீங்கள் வழங்கியாக வேண்டும். அதாவது இந்தக் கடுமையான ஊரடங்குக் காலகட்டத்தில் பொருளாதார உதவிகளுக்கும், நாம் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பரிசோதனை, பாதிக்கப்பட்டோரைக் கண்டறிதல், பொது சுகாதார செயல்பாடுகளுக்குமான தெளிவான நடவடிக்கைகளை நீங்கள் அறிவித்தாக வேண்டும். மிகவும் காலதாமதமாவதற்குள் இந்தக் கொடுந்தொற்றுநோயை நாம் முறியடிக்க இந்த இரண்டுமே முக்கியமானவையாகும்.

கொரோனாவுக்கு எதிராகப் போராடும் இந்தத் தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்கிறோம்.

ஆனால் உங்கள் அரசாங்கம் குடிமக்களிடமிருந்துதான் எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறதேயல்லாமல், அவர்களது வாழ்வாதாரத்தை அரசாங்கம் கவனித்துக்கொள்ளும் என்ற உத்தரவாதம் எதையும் நீங்கள் அளிக்கவில்லை.

நம் மக்கள் உயிரோடும் ஆரோக்கியத்தோடும் இருந்திட இதைச் செய்யுங்கள் என்று உங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

சீத்தாராம் யெச்சூரி
பொதுச்செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்